கரூர் மாவட்டத்தில் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தது


கரூர் மாவட்டத்தில் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தது
x
தினத்தந்தி 10 April 2021 11:24 PM IST (Updated: 10 April 2021 11:24 PM IST)
t-max-icont-min-icon

கொரோனாவை கட்டுப்படுத்த கரூர் மாவட்டத்தில் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தது.

கரூர்
கட்டுப்பாடுகள்
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனையொட்டி நேற்றுமுதல் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி கொரோனா நோய் தொற்று பரவாமல் தடுக்கும் வகையில், திருவிழாக்கள் மற்றும் மதம் சார்ந்த கூட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அரசு மற்றும் தனியார்பஸ்களில் நின்றபடி பயணம் செய்ய அனுமதி இல்லை. வணிக வளாகங்கள், உணவு விடுதிகள் மற்றும் டீ கடைகள் 50 சதவீத வாடிக்கையாளர்களை கொண்டு இரவு 11 மணி வரை மட்டுேம இயங்கிட வேண்டும். தியேட்டர்களில் 50 சதவீத இருக்கைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. அந்தவகையில் கரூர் மாவட்டத்தில் நேற்று முதல் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தது. 
அபராதம் விதிப்பு
கொரோனா பரவரை தடுக்கும் வகையில் நேற்று கரூர் மாவட்டத்தில் காலை முதலே நகராட்சி சார்பில் நகரின் பல்வேறு இடங்களில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. கரூர் பஸ்நிலையத்தில் முக கவசம் அணிந்த பின்னரே பயணிகள் பஸ்சில் ஏற அனுமதிக்கப்பட்டனர். 
அதேபோல் பொதுமக்கள் அனைவரும் முக கவசம் அணிந்து சென்றதை காண முடிந்தது. ஒருசில இடங்களில் முக கவசம் அணியாமல் சென்றவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இதேபோல் கரூரில் உள்ள தியேட்டர்களில் கிருமிநாசினி அடித்து சுத்தம் செய்யப்பட்டது.
அறிவிப்பு பலகை
தியேட்டர்களுக்கு வரும் ரசிகர்களுக்கு உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டது. கைகளை சுத்தம் செய்ய சானிடைசர் வைக்கப்பட்டு இருந்தது. மேலும் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே டிக்கெட்கள் வழங்கப்பட்டது. கரூரில் உள்ள கோவில்கள் முன்பு பக்தர்கள் சமூக இடைவெளியுடனும், முக கவசம் அணிந்தும் வரவேண்டும். முக கவசம் அணியாதவர்கள் உள்ளே செல்ல அனுமதி இல்லை என பதாகைகள் வைக்கப்பட்டிருந்தன. கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் கொரோனா தாக்கம் அதிகரித்து வரும் காரணத்தால் அதை தடுக்கும் நடவடிக்கையாக தமிழக அரசின் வழிகாட்டுதலின்பேரில் கோவில் நடை இரவு 8 மணிக்கு சாத்தப்படும். அதனை முன்னிட்டு கோவிலில் நடைபெறும் அர்த்தஜாம பூஜை 6.45 மணியளவில் நடைபெறும் என அறிவிப்பு பலகை வைக்கப்பட்டிருந்தது. 
முககவசம் அணிந்து...
இதேபோல் ஜவகர்பஜார் உள்ளிட்ட கடைவீதிகளில் வாடிக்கையாளர்கள் முக கவசம் அணிந்து வர வேண்டும். சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என அறிவிப்பு ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டிருந்தது. மேலும் கரூர் பஸ்நிலையம் அருகே மனோகரா கார்னர் அருகே நகர்நல அலுவலர் யோகானந்த் தலைமையிலான குழுவினர் அந்த வழியாக வந்த அரசு மற்றும் தனியார் பஸ்களில் நின்றபடி பொதுமக்கள் பயணம் செய்கிறார்களா என்று ஆய்வு செய்தனர். மேலும் கரூரில் உள்ள தியேட்டர்களுக்கு சென்று ஆய்வு செய்தனர்.

Next Story