கொல்லிமலை மலைப்பாதையில் சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்து சிறுவன் உள்பட 6 பேர் படுகாயம்
கொல்லிமலை மலைப்பாதையில் சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்து சிறுவன் உள்பட 6 பேர் படுகாயம்
சேந்தமங்கலம்:
கொல்லிமலை மலைப்பாதையில் சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சிறுவன் உள்பட 6 பேர் படுகாயம் அடைந்தனர்.
தலைகுப்புற கவிழ்ந்தது
காஞ்சீபுரம் மாவட்டம் திருக்கழுக்குன்றத்தை சேர்ந்த 25 பேர் நேற்று நாமக்கல் மாவட்டம் கொல்லிமலைக்கு ஒரு சுற்றுலா வேனில் வந்தனர். சுற்றுலா வேனை திருக்கழுக்குன்றத்தை சேர்ந்த டில்லிபாபு (வயது 24) என்பவர் ஓட்டி வந்தார். அவர்கள் மலையில் உள்ள பல்வேறு இடங்களுக்கு சென்று சுற்றி பார்த்து விட்டு மதியம் மலைப்பாதை கொண்டை ஊசி வளைவு பகுதியில் உள்ள சமவெளி பகுதியில் இறங்கி கொண்டிருந்தனர்.
அப்போது 12-வது கொண்டை ஊசி வளைவில் இருந்து இறங்கும்போது சுற்றுலா வேன் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. மேலும் பிரேக் பழுதானதால் சுற்றுலா வேன் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனால் வேனில் வந்தவர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கி படுகாயம் அடைந்து அபய குரல் எழுப்பினர்.
6 பேர் படுகாயம்
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த வழியாக சென்றவர்கள் உடனடியாக 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து மூன்று 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தது. பின்னர் படுகாயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு சேந்தமங்கலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.
விபத்தில் சிக்கிய சுற்றுலா வேனில் 5 வயது சிறுவன் உள்பட 25 பேர் வந்ததாக கூறப்படுகிறது. இதில் சிறுவன் உள்பட 6 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. மற்றவர்கள் சிறு காயம் அடைந்தனர். இந்த சம்பவத்தால் நேற்று 11-வது கொண்டை ஊசி வளைவில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் இந்த விபத்து குறித்து கொல்லிமலை வாழவந்தி நாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
=======
Related Tags :
Next Story