கொரோனா பரவலை தடுக்க வணிக நிறுவனங்கள் அரசு வழிகாட்டு முறைகளை கடைபிடிக்க வேண்டும்- ஆணையாளர் கண்ணன் அறிவுறுத்தல்
நெல்லை மாநகராட்சி பகுதியில் கொரோனா பரவலை தடுக்க வணிக நிறுவனங்கள் அரசு வழிகாட்டு முறைகளை கடைபிடிக்க வேண்டும் என ஆணையாளர் கண்ணன் அறிவுறுத்தினார்.
நெல்லை, ஏப்:
கொரோனா பரவலை தடுப்பதற்கு நெல்லை மாநகராட்சி பகுதியில் உள்ள வணிக நிறுவனங்கள் அரசு வழிகாட்டும் நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்று மாநகராட்சி ஆணையாளர் கண்ணன் அறிவுறுத்தி உள்ளார்.
ஆலோசனை கூட்டம்
கொரோனா பரவலை தடுப்பதற்கு நெல்லை மாநகராட்சி பகுதிகளில் வணிக நிறுவன நிர்வாகிகள் மற்றும் சங்க பிரதிநிதிகளுடன் நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது. ஆணையாளர் கண்ணன் தலைமை தாங்கினார். மாநகர் நல அலுவலர் டாக்டர் சரோஜா முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் மாநகராட்சி ஆணையாளர் கண்ணன் கூறியதாவது:-
நெல்லை மாநகர பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் வணிக பகுதிகளில் அதிகமாக கூடுவதை தவிர்க்க வேண்டும். வெளியில் செல்லும்போது கண்டிப்பாக முக கவசம் அணிய வேண்டும். காய்ச்சல் சளி இருமல் உள்ளவர்கள் கடைக்கு, வணிக நிறுவனங்களுக்கு செல்லக்கூடாது.
மாநகராட்சி எல்லைக்குள் உள்ள அனைத்து கடைகள், வணிக நிறுவனங்கள், உணவு விடுதிகள், தனியார் நிறுவனங்கள் போன்ற மக்கள் கூடும் அனைத்து இடங்களிலும் கை கழுவ சோப்பு, சானிடர் வசதி செய்து கொடுக்க வேண்டும். பஸ், ஆட்டோவில் பயணம் செய்யும்போது சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். வணிக நிறுவனங்கள் தமிழக அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும்.
திருவிழாவுக்கு தடை
நெல்லை மாநகர பகுதியில் திருவிழாக்கள் மற்றும் மதம் சார்ந்த கூட்டம் நடத்த தடை செய்யப்பட்டுள்ளது. சினிமா தியேட்டர்களில் 50 சதவீத இருக்கைகள் மட்டுமே பயன்படுத்த வேண்டும். மொத்த காய்கறி மற்றும் காய்கறி சந்தைகளில் சில்லரை விற்பனை தடை செய்யப்பட்டுள்ளது. திருமண மண்டபங்களில் 100 பேருக்கு மிகாமல் பங்கேற்க உரிமையாளர் உறுதி செய்ய வேண்டும்.
ஓட்டல்களில் 50 சதவீத இருக்கைகள் மட்டுமே பயன்படுத்த வேண்டும். விதிமுறைகளை பின்பற்றாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்க 9 சிறப்பு குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story