ராஜஸ்தானில் உயிரிழந்த ராணுவ வீரரின் உடல் சொந்த ஊரில் அடக்கம்


ராஜஸ்தானில் உயிரிழந்த ராணுவ வீரரின் உடல் சொந்த ஊரில் அடக்கம்
x
தினத்தந்தி 11 April 2021 1:38 AM IST (Updated: 11 April 2021 1:38 AM IST)
t-max-icont-min-icon

ராஜஸ்தானில் உயிரிழந்த ராணுவ வீரரின் உடல் சொந்த ஊர் வந்தது.

விராலிமலை
திருச்சி மாவட்டம் மணப்பாைற தாலுகா மறவனூரை சேர்ந்தவர் வெள்ளக்கண்ணு. இவரது மகன் செல்வகுமார் (வயது 34). ராணுவத்தில் பணியாற்றி வந்த இவருக்கு புவனேஸ்வரி என்ற மனைவியும், 2 பெண் குழந்தைகளும் உள்ளனர். இவர்கள் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர். செல்வகுமார் ராஜஸ்தான் மாநிலத்தில் ராணுவ வீரராக பணிபுரிந்து வந்தார். இந்தநிலையில் செல்வகுமார் இறந்து விட்டதாக கடந்த 2 நாட்களுக்கு முன்பு ராணுவ அதிகாரிகளிடமிருந்து தகவல் வந்தது. இதனைக்கேட்டு அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் கதறி அழுதனர்.  இந்தநிலையில் செல்வகுமாரின் உடல் நேற்று மதியம் சிறப்பு விமானம் மூலமாக திருச்சிக்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் விராலிமலையில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டு செல்வகுமாரின் குடும்பத்தினரிடம் முறைப்படி உடல் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் அவரது சொந்த ஊரான மணப்பாறை அருகே உள்ள மரவனூர் சமுத்திரத்திற்கு கொண்டு செல்லப்பட்டு இறுதி சடங்குகள் செய்யப்பட்டு உடல் அடக்கம் செய்யப்பட்டது. இந்தநிலையில் தான் பணிபுரிந்த இடத்தில் செல்வகுமாருக்கு  காய்ச்சல் ஏற்பட்டு உடல்நிலை பாதிக்கப்பட்டதாகவும், இதற்காக மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்காக அவர் அங்கு தடுப்பூசி போட்டுக்கொண்டு தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வந்தார் என்றும் ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தகவல் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனை ராணுவத்தினரும் அவரது குடும்பத்தினரும் மறுத்தனர். குறைந்த ரத்த அழுத்தத்தால் நெஞ்சுவலி ஏற்பட்டு செல்வகுமார் இறந்ததாக கூறப்படுகிறது.


Next Story