தென்காசியில் முக கவசம் அணியாமல் வந்தவர்களுக்கு ரூ.7 ஆயிரம் அபராதம்


தென்காசியில் முக கவசம் அணியாமல் வந்தவர்களுக்கு ரூ.7 ஆயிரம் அபராதம்
x
தினத்தந்தி 11 April 2021 1:44 AM IST (Updated: 11 April 2021 1:44 AM IST)
t-max-icont-min-icon

தென்காசியில் முக கவசம் அணியாமல் வந்தவர்களிடம் இருந்து நேற்று ஒரே நாளில் ரூ.7 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு வசூலானது.

தென்காசி, ஏப்:
தென்காசியில் முக கவசம் அணியாமல் வந்தவர்களுக்கு நேற்று ஒரே நாளில் ரூ.7 ஆயிரம் அபராதம் விதித்து நகரசபை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

கொரோனா பரவல்

கொரோனா பரவலை தடுக்க தென்காசி மாவட்ட கலெக்டர் சமீரன், தீவிர நடவடிக்கை எடுக்க அனைத்து துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இதன்படி சுகாதாரத்துறை மூலம் காய்ச்சல் உள்ளவர்களை கண்டறிந்து வருகிறார்கள். பிற மாநிலங்களில் இருந்து வருபவர்கள் கண்காணிக்க படுகிறார்கள். உள்ளாட்சி துறையினர் நோய்த்தொற்று உள்ள பகுதிகளுக்கு கட்டுப்பாடுகளை விதித்து அங்குள்ள பொதுமக்களை எச்சரித்து வருகிறார்கள்.

ரூ.7 ஆயிரம் அபராதம்

தென்காசி நகராட்சி சுகாதார அலுவலர் முகமது இஸ்மாயில் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் நகரசபை பணியாளர்கள் ஆகியோர் காவல்துறையினருடன் இணைந்து தென்காசியில் நேற்று சுவாமி சன்னதி பஜார், அம்மன் சன்னதி பஜார், கீழ ரதவீதி ஆகிய பகுதிகளில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது முக கவசம் அணியாமல் சாலையில் வந்தவர்களை நிறுத்தி அவர்களுக்கு அபராதம் விதித்து அவர்களிடம் முக கவசம் வழங்கினர். ஒருவருக்கு ரூ.200 வீதம் மொத்தம் நேற்று ஒரே நாளில் ரூ.7 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் கொரோனா விதிமுறைகள் கடைகளில் பின்பற்றப்படுகிறதா என்பதையும் அவர்கள் ஆய்வு செய்தனர். தொடர்ந்து இந்த சோதனை நடைபெறும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story