ரூ.16 லட்சம் தங்கம் சிக்கியது
மதுரை விமான நிலையத்தில் ரூ.16 லட்சம் தங்கம் சிக்கியது
மதுரை
துபாயில் இருந்து மதுரைக்கு கடத்தி வரப்பட்ட ரூ.16 லட்சம் மதிப்பிலான தங்கம் பிடிபட்டது.
மதுரை விமான நிலையம்
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு படிப்படியாக அதிகரித்து வருகிறது. இதன் எதிரொலியாக விமான நிலையங்களுக்கு, வெளிநாடுகளில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் வரும் பயணிகள் பல்வேறு கட்ட சோதனைகளுக்கு பிறகே அனுமதிக்கப்படுகின்றனர். பரிசோதனையுடன் சேர்த்து சுங்கத்துறை அதிகாரிகளின் பரிசோதனையும் தீவிரமாக நடைபெறுகிறது.
இந்தநிலையில் துபாயில் இருந்து மதுரைக்கு விமானம் ஒன்று வந்தது. அந்த விமானத்தில் கடத்தல் தங்கம் கொண்டு வரப்படுவதாக மதுரை சுங்க புலனாய்வு துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதைதொடர்ந்து துபாயில் இருந்து வந்த விமானத்தில், வந்திறங்கிய பயணிகள் மற்றும் அவர்களது உடமைகளை சுங்க புலனாய்வுத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
தங்கம் சிக்கியது
அப்போது புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் பகுதியை சேர்ந்த 38 வயது வாலிபரது நடவடிக்கையில் அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அவரை தனி அறையில் வைத்து சுங்க அதிகாரிகள் தீவிரமாக சோதனை செய்தனர். அப்போது அவரது உள்ளாடையில் களிமண் போன்ற பொருட்களுடன் தங்கத்துகள்களை கலந்து கடத்தி வந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அந்த களிமண் போன்ற பொருளில் இருந்த சுமார் 355 கிராம் எடை கொண்ட தங்கத்தை சுங்க துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு ரூ.16 லட்சத்து 76 ஆயிரம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடத்தல் தங்கத்தை கடத்தி வந்த வாலிபர் கடந்த 2 வருடங்களாக துபாயில் பணியாற்றி வந்துள்ளார். இந்தநிலையில் சொந்த ஊருக்கு வந்தபோது கடத்தல் தங்கத்தை கடத்தி வந்து சிக்கியது விசாரணையில் தெரியவந்தது.
அவரிடம் இந்த கடத்தல் தங்கத்தை யார் கொடுத்து விட்டார்கள் என்பது குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story