சேலத்தில் தேங்காய் வாங்கிவிட்டு வியாபாரியிடம் 500 ரூபாய் கள்ளநோட்டு கொடுத்த தொழிலாளி கைது
சேலத்தில் தேங்காய் வாங்கிவிட்டு வியாபாரியிடம் 500 ரூபாய் கள்ளநோட்டு கொடுத்த தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
சேலம்:
சேலத்தில் தேங்காய் வாங்கிவிட்டு வியாபாரியிடம் 500 ரூபாய் கள்ளநோட்டு கொடுத்த தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
தறித்தொழிலாளி
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள சக்திநாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் பாலாஜி (வயது 38). தறித்தொழிலாளியான இவர் வீட்டில் காய்கறி வியாபாரமும் செய்து வருகிறார். இவர் சேலத்தில் காய்கறிகளை மொத்தமாக வாங்கி செல்வது வழக்கம். இந்த நிலையில் நேற்று முன்தினம் பாலாஜி சேலம் கடைவீதிக்கு வந்தார்.
பின்னர் அவர் அங்கிருந்த வீராணம் பகுதியை சேர்ந்த முருகன் என்பவருடைய தேங்காய் கடைக்கு சென்று 12 தேங்காய்களை வாங்கினார். அதற்கு வியாபாரியிடம் பாலாஜி 500 ரூபாய் நோட்டு ஒன்றை கொடுத்தார். ஆனால் அந்த ரூபாய் நோட்டு மீது முருகனுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் வேறு ரூபாய் நோட்டு கொடுக்குமாறு அவரிடம் கேட்டார். இதையடுத்து பாலாஜி மீண்டும் கொடுத்த ரூபாய் நோட்டு மீதும் முருகனுக்கு சந்தேகம் ஏற்பட்டது.
போலீசார் விசாரணை
இதையடுத்து முருகன் இதுகுறித்து சேலம் டவுன் குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்று பாலாஜியை பிடித்து விசாரணை நடத்தினர். மேலும் அவர் வைத்திருந்தது கள்ளநோட்டுகள் என்பது தெரியவந்தது.
போலீசாரிடம் பாலாஜி, கடைவீதியில் உள்ள ஒரு கடையில் இந்த பணத்தை தனக்கு கொடுத்ததாக தெரிவித்தார். அங்கு சென்று போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அந்த கடையில் உள்ளவர்கள் பாலாஜிக்கு பணம் கொடுக்கவில்லை என்றனர்.
கைது
இதையடுத்து அவரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று தீவிர விசாரணை நடத்தினர். அப்போது அவர் பணத்துக்கான சரியான விவரத்தை தெரிவிக்கவில்லை. அதைத்தொடர்ந்து அவரிடம் இருந்து 500 ரூபாய் கள்ளநோட்டுகள் 3 பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் கள்ளநோட்டுகள் வைத்திருந்தது தொடர்பாக பாலாஜியை போலீசார் கைது செய்தனர். அவருக்கு கள்ளநோட்டுகள் எப்படி கிடைத்தது?, கள்ளநோட்டுகளை கொடுத்தது யார்? என்பன உள்ளிட்ட விவரங்கள் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம் கடைவீதியில் 500 ரூபாய் கள்ளநோட்டு கொடுத்த சம்பவம் வியாபாரிகளிடையே கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story