கன்றுக்குட்டியுடன் கிணற்றுக்குள் தவறி விழுந்த காட்டெருமைகள்


கன்றுக்குட்டியுடன் கிணற்றுக்குள் தவறி விழுந்த காட்டெருமைகள்
x
தினத்தந்தி 11 April 2021 2:24 AM IST (Updated: 11 April 2021 2:24 AM IST)
t-max-icont-min-icon

வடமதுரை அருகே, தண்ணீர் தேடி வந்த போது கன்றுக்குட்டியுடன் காட்டெருமைகள் கிணற்றுக்குள் தவறி விழுந்தன. ராட்சத கிரேன் மூலம் அவைகள் மீட்கப்பட்டன.

திண்டுக்கல் : 
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே உள்ள சுக்காம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட அயனாம்பட்டியை சேர்ந்தவர் வெள்ளையன். விவசாயி. இவருக்கு அதே பகுதியில் தோட்டம் உள்ளது.

அந்த தோட்டத்தில் 60 அடி ஆழமுள்ள கிணறு உள்ளது. அதில் 10 அடிக்கு தண்ணீர் இருந்தது. நேற்று அதிகாலை 3 மணியளவில், கிணற்றுக்குள் இருந்து காட்டெருமைகள் கத்தின. 

அந்த சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் சம்பவ இடத்துக்கு சென்று பார்த்தனர். 

அப்போது கிணற்றுக்குள் 3 காட்டெருமைகள் தண்ணீரில் தத்தளித்தப்படி சத்தம் போட்டு கொண்டிருந்தன. அதில் காட்டெருமை கன்றுக்குட்டியும் ஒன்று இருந்தது.

 
இதுகுறித்து அப்பகுதி மக்கள், அய்யலூர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அய்யலூர் வனச்சரக அலுவலர் குமரேசன் தலைமையிலான வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். 
பின்னர் கிணற்றில் இருந்த தண்ணீரை மோட்டார் மூலம் வெளியேற்றினர்.

 இதைத்தொடர்ந்து குஜிலியம்பாறை தீயணைப்பு நிலைய அலுவலர் மருதை தலைமையிலான வீரர்களும் அங்கு விரைந்தனர்.

கயிறு கட்டி கிணற்றுக்குள் இறங்கி, காட்டெருமைகளை தீயணைப்பு படையினர் மீட்க முயன்றனர்.

 ஆனால் தீயணைப்பு படைவீரா்களை காட்டெருமைகள் முட்டின. இதனால் அவைகளை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டது. 
  
இதைத்தொடர்ந்து அவைகளை மயக்க ஊசி செலுத்தி மீட்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக கோவையில் உள்ள கால்நடைத்துறை மருத்துவக் குழுவினர் வரவழைக்கப்பட்டனர். 

அவர்கள், கிணற்றில் இருந்த காட்டெருமைகளுக்கு துப்பாக்கி மூலம் மயக்க ஊசி செலுத்தினர். சிறிது நேரத்தில் காட்டெருமைகள் மயக்கமடைந்தன.

 சுமார் 13 மணி நேரத்திற்கு பின், ராட்த கிரேன் மூலம் கன்றுக்குட்டியும், ஆண் காட்டெருமை ஒன்றும் உயிருடன் மீட்கப்பட்டன. ஆனால் மற்றொரு பெண் காட்டெருமை உயிரிழந்து விட்டது. அதன் உடலையும் தீயணைப்பு துறையினர் மீட்டனர்.


இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, தண்ணீர் தேடி வந்தபோது கிணற்றுக்குள் தவறி காட்டெருமைகள் விழுந்திருக்கலாம் என்று கருதுகிறோம்.  

கிணற்றுக்குள் விழுந்ததில் பலத்த காயம் ஏற்பட்டதால் பெண் காட்டெருமை உயிரிழந்து விட்டது. 

மீட்கப்பட்ட கன்றுக்குட்டி மற்றும் ஆண் காட்டெருமை வனப்பகுதியில் விடப்படடன என்றனர்.

Next Story