சேலத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மகாத்மா காந்தி விளையாட்டு மைதானம் மீண்டும் மூடப்பட்டது-நடைபயிற்சி செல்வோர் ஏமாற்றம்


சேலத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மகாத்மா காந்தி விளையாட்டு மைதானம் மீண்டும் மூடப்பட்டது-நடைபயிற்சி செல்வோர் ஏமாற்றம்
x
தினத்தந்தி 11 April 2021 4:08 AM IST (Updated: 11 April 2021 4:08 AM IST)
t-max-icont-min-icon

சேலத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மகாத்மா காந்தி விளையாட்டு மைதானம் மீண்டும் மூடப்பட்டது. இதனால் நடைபயிற்சி செல்வோர் ஏமாற்றம் அடைந்தனர்.

சேலம்:
சேலத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மகாத்மா காந்தி விளையாட்டு மைதானம் மீண்டும் மூடப்பட்டது. இதனால் நடைபயிற்சி செல்வோர் ஏமாற்றம் அடைந்தனர்.
கொரோனா பாதிப்பு
நாடு முழுவதும் கொரோனா வைரசின் பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. இதை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றது. சேலம் மாவட்டத்தில் கொரோனா நோய்தடுப்பு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். மாவட்டத்தில் உள்ள காய்கறி கடைகள், வணிக வளாகங்கள் மற்றும் அனைத்து வித ஷோரூம்கள் உள்ளிட்டவைகளில் 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் செயல்பட உத்தரவிடப்பட்டுள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட நிறுவனங்களில் விழிப்புணர்வு பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன.
விளையாட்டு மைதானம் மூடப்பட்டது
விளையாட்டு அரங்கங்கள் மற்றும் மைதானங்களில் பார்வையாளர்களை அனுமதிக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி, கொரோனா தடுப்பு நடவடிக்கையாக சேலம் மகாத்மா காந்தி விளையாட்டு மைதானம் நேற்று காலை மீண்டும் மூடப்பட்டது. இதனால் நடைபயிற்சி மற்றும் விளையாட்டு பயிற்சியில் ஈடுபட வந்த வீரர், வீராங்கனைகள் தவித்தனர். அவர்கள் யாரையும் செல்ல அனுமதிக்கப்படவில்லை. இதையடுத்து அவர்கள் ஏமாற்றத்துடன் அங்கிருந்து திரும்பி சென்றனர். 
நீச்சல் குளம்
மேலும் மகாத்மா காந்தி மைதானத்தில் உள்ள நீச்சல் குளமும் மூடப்பட்டது. ஏற்கனவே கடந்த ஆண்டு சேலம் மகாத்மா காந்தி விளையாட்டு மைதானத்தில் உள்ள ஒரு அறை கொரோனா சிகிச்சை மையமாக செயல்பட்டு வந்தது. இதனால் மைதானம் மூடப்பட்டது. சமீபத்தில் திறக்கப்பட்ட இந்த விளையாட்டு மைதானம் மீண்டும் மூடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே கொரோனா பாதிப்பு அதிகரிப்பு காரணமாக மீண்டும் அங்கு கொரோனா சிகிச்சை மையம் செயல்பட தயார் நிலையில் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அரசு பஸ்கள்
சேலம் மாநகரில் பெரும்பாலான அரசு மற்றும் தனியார் பஸ்களில் பயணிகள் சமூக இடைவெளியை கடைபிடித்து இருந்ததுடன் முககவசம் அணிந்து கொண்டு சென்றனர். மேலும் சேலம் புதிய பஸ்நிலையத்தில் இருந்து வெளியூர் செல்லும் பஸ்களுக்கு ஊழியர்கள் மூலம் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்பதால் குறைவான பயணிகளே பஸ்சில் சென்றனர்.

Next Story