ஈரோடு பெரிய மாரியம்மன் கோவில் மஞ்சள் நீராட்டு விழாவுக்கு தடை; கம்பத்துக்கு புனிதநீர் ஊற்ற அனுமதி கிடையாது
ஈரோடு பெரிய மாரியம்மன் கோவில் கம்பத்துக்கு புனிதநீர் ஊற்ற இன்று (ஞாயிற்றுக்கிழமை) அனுமதி கிடையாது. மேலும், மஞ்சள் நீராட்டு விழாவுக்கு தடை விதித்து மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் உத்தரவிட்டு உள்ளார்.
ஈரோடு
ஈரோடு பெரிய மாரியம்மன் கோவில் கம்பத்துக்கு புனிதநீர் ஊற்ற இன்று (ஞாயிற்றுக்கிழமை) அனுமதி கிடையாது. மேலும், மஞ்சள் நீராட்டு விழாவுக்கு தடை விதித்து மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் உத்தரவிட்டு உள்ளார்.
பெரிய மாரியம்மன் கோவில்
ஈரோட்டில் மிகவும் பிரசித்தி பெற்ற பெரிய மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் மற்றும் அதன் வகையறா கோவில்களான சின்ன மாரியம்மன், காரை வாய்க்கால் மாரியம்மன் ஆகிய கோவில்களிலும் ஆண்டுதோறும் குண்டம் தேர்த்திருவிழா வெகுவிமர்சையாக கொண்டாடப்படும். இதில் பூச்சாட்டுதலில் தொடங்கி மஞ்சள் நீராட்டு விழா நடக்கும் வரை ஈரோடு மாநகரம் விழாக்கோலம் பூண்டு காணப்படும். எங்கு பார்த்தாலும் பக்தர்கள் தீர்த்தக்குடம், அக்னி சட்டி எடுத்தல், அலகு குத்தி செல்லுதல் வண்ணம் காணப்படுவார்கள்.
குறிப்பாக கம்பம் பிடுங்கும் தினத்தில் மஞ்சள் நீராட்டு விழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்படும். கம்பம் ஊர்வலமாக கொண்டு செல்லப்படும்போது பக்தர்கள் வழிநெடுகிலும் காத்திருந்து கம்பத்தின் மீது உப்பு, மிளகு வீசுவார்கள். மேலும், பக்தர்கள் ஒருவர் மீது ஒருவர் மஞ்சள் நீர் ஊற்றி கொண்டாடுவார்கள். இவ்வாறு சிறப்பாக நடந்து வந்த பெரிய மாரியம்மன் கோவில் திருவிழா கடந்த ஆண்டு கொரோனா தொற்று பரவல் காரணமாக தடை செய்யப்பட்டது.
பூச்சாட்டுதலுடன் தொடங்கியது
இந்த ஆண்டின் தொடக்கத்தில், கொரோனா தொற்று பரவல் குறைவாக காணப்பட்டது. இதனால் இந்த ஆண்டு திருவிழாவை நடத்தி கொள்ள அனுமதி வழங்கப்பட்டது.
அதன்படி கடந்த 6-ந் தேதி பெரிய மாரியம்மன் கோவில் மற்றும் அதன் வகையறா கோவில்களில் பூச்சாட்டுதலுடன் திருவிழா தொடங்கியது. 7-ந் தேதி இரவு கம்பங்கள் நடப்பட்டன.
அதைத்தொடர்ந்து கம்பத்துக்கு பக்தர்கள் புனிதநீர், பால் ஊற்றி வழிபாடு செய்து வந்தார்கள்.
கடந்த 8-ந் தேதி காலையில் காரை வாய்க்கால் மாரியம்மன் கோவிலில் குண்டம் விழா நடந்தது. இதில் பூசாரிகள் மட்டும் தீ மிதிக்க அனுமதிக்கப்பட்டனர். அன்றைய தினம் சின்ன மாரியம்மன் கோவிலில் தேரோட்டம் நடந்தது.
மஞ்சள் நீராட்டு விழா
இந்தநிலையில் கொரோனா வைரசின் 2-வது அலை மீண்டும் வேகமாக பரவி வருவதால் கோவில் திருவிழாவை நடத்த தமிழக அரசு தடை விதித்து உத்தரவிட்டது.
இதைத்தொடர்ந்து ஈரோடு பெரிய மாரியம்மன் கோவில் திருவிழாவில் நடக்கும் மஞ்சள் நீராட்டு விழாவுக்கு தடை விதித்து மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் அறிவித்து உள்ளார்.
ஈரோடு பெரிய மாரியம்மன் கோவிலில் நேற்று காலை கலெக்டர் சி.கதிரவன் ஆய்வு செய்தார்.
அப்போது கம்பத்துக்கு பக்தர்கள் புனித நீர் ஊற்றுவதை தவிர்க்க வேண்டும் என்றும், பக்தர்கள் கொண்டு வரும் புனிதநீர் குடத்தை பூசாரிகள் வாங்கி கொண்டு கம்பத்துக்கு ஊற்ற வேண்டும் என்றும், கோவில் வளாகத்தில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துவிட்டு உடனடியாக வெளியேறி விட வேண்டும் என்றும் அறிவுரை வழங்கினார். அதன்பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
அதிகாலை
கோவில் திருவிழாவை நடத்தி கொள்ளலாம் என்று ஏற்கனவே அறிவிப்பு வெளியானதால், ஈரோடு பெரிய மாரியம்மன் கோவில் திருவிழா தொடங்கப்பட்டது. அங்கு கம்பங்கள் நடப்பட்டு பக்தர்கள் தரிசனம் செய்து வருகிறார்கள். ஆனால் தற்போது கோவில் திருவிழாவை நடத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதனால் கம்பங்களுக்கு புனித நீர் ஊற்ற 6 மணி வரை அனுமதி அளிக்கப்படுகிறது. நாளை (அதாவது இன்று) பக்தர்கள் கம்பத்துக்கு புனிதநீர் ஊற்ற அனுமதி கிடையாது. கோவிலுக்கு வந்து சமூக இடைவெளியுடன் அம்மனை தரிசனம் செய்யலாம். பக்தர்கள் கொண்டு வரும் பூ, தேங்காய், பழம் போன்ற பூஜை பொருட்களை கோவில் பூசாரிகள் வாங்கமாட்டார்கள்.
கம்பங்களின் ஊர்வலத்தில் பக்தர்கள் கூடுவதை தவிர்க்கும் வகையில் 12-ந் தேதி (நாளை) அதிகாலை 5 மணிக்கு கம்பம் பிடுங்குவதற்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மஞ்சள் நீராட்டு விழாவை நடத்தினால் மீண்டும் கொரோனா தொற்று வேகமாக பரவிவிடும். எனவே பொதுமக்களின் நலன் கருதி மஞ்சள் நீராட்டு விழாவுக்கு தடை விதிக்கப்படுகிறது.
இவ்வாறு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் கூறினார்.
Related Tags :
Next Story