வாக்குப்பதிவு எந்திரம் எடுத்துச் செல்லப்பட்ட விவகாரம்: திருட்டு குற்றத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டும்


வாக்குப்பதிவு எந்திரம் எடுத்துச் செல்லப்பட்ட விவகாரம்: திருட்டு குற்றத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டும்
x
தினத்தந்தி 11 April 2021 6:10 PM IST (Updated: 11 April 2021 6:10 PM IST)
t-max-icont-min-icon

வாக்குப்பதிவு எந்திரம் எடுத்துச் செல்லப்பட்ட விவகாரம்: திருட்டு குற்றத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் தேர்தல் ஆணையத்திற்கு காங்கிரஸ் வேண்டுகோள்.

சென்னை, 

சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகுவிடம் வேளச்சேரி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் அசன் மவுலானா அளித்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

வேளச்சேரி தொகுதியில் வாக்குச்சாவடி ஒன்றில் சட்ட விரோதமாக வாக்குப் பதிவு எந்திரம் அப்புறப்படுத்தப்பட்டுள்ளது. அங்கு கைப்பற்றப்பட்ட மற்றொரு எந்திரம், அங்கு வாக்குப்பதிவுக்காக பயன்படுத்தப்பட்ட விவிபேட் எந்திரமாகும். இதை தலைமை தேர்தல் அதிகாரியும் ஒப்புக் கொண்டுள்ளார்.

தலைமை தேர்தல் அதிகாரியை 7-ந் தேதி நேரில் சந்தித்து புகார் கொடுத்தபோது, அது பயன்படுத்தப்படாத மாற்று எந்திரங்கள் என்று கூறியிருந்தார். எனவே கிரிமினல் நடவடிக்கை தேவையில்லை என்றும் தெரிவித்தார்.

ஆனால் 9-ந் தேதியன்று வாக்குப்பதிவின்போது விவிபேட் பயன்படுத்தப்பட்டதாக அவர் ஒப்புக்கொண்டுள்ளார். தேர்தல் நடத்தும் அதிகாரியும், அவரின் கீழ் வரும் அலுவலர்களும், யாருக்கோ உதவுவதற்காக இந்த தவறை செய்துள்ளனர். அதோடு, அவை வாக்குப்பதிவுக்கு பயன்படுத்தப்படவில்லை என்று தலைமை தேர்தல் அதிகாரிக்கும் தவறான தகவலை அளித்துள்ளனர்.

இதுதொடர்பாக துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தலைமை தேர்தல் அதிகாரி கூறியுள்ளார். இவற்றை ஆய்வு செய்து பார்க்கும்போது, அந்த எந்திரங்கள் திருடி கொண்டு செல்லப்பட்டுள்ளன என்றே தெரிகிறது. எனவே திருட்டு குற்றத்தின் கீழ் எப்.ஐ.ஆர். பதிவு செய்ய உத்தரவிட வேண்டும். தவறான தகவல் அளித்த தேர்தல் நடத்தும் அதிகாரி உள்ளிட்ட மற்ற தேர்தல் அலுவலர்களை உடனடியாக இடைக்கால பணிநீக்கம் செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story