கொரோனா தடுப்பு நடவடிக்கையில் சுகாதாரத்துறையினருடன் போலீசார் இணைந்து செயல்பட கோரிக்கை
நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் சுகாதாரத்துறையினருடன் போலீசார் இணைந்து செயல்பட வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
பரமத்திவேலூர்,
நாமக்கல் மாவட்டத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா 2-வது அலையை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் சுகாதாரத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். அதன் ஒரு பகுதியாக பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் ஆய்வு செய்து, அங்கு முககவசம் அணியாமல் வருபவர்களுக்கு அபராதம் விதித்து வருகிறார்கள். மேலும், கொரோனா தடுப்பு நடவடிக்கையை பின்பற்றாத வணிக நிறுவனங்கள், கடைகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்து வருகிறார்கள்.
சுகாதாரத்துறையினரின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு சில இடங்களில் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவதோடு, சரியாக ஒத்துழைப்பும் தருவதில்லை என்று புகார் எழுந்துள்ளது.
தாக்குதல்
இதனிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு பரமத்திவேலூரில் இருந்து பொத்தனூர் செல்லும் சாலையில் கபிலர்மலை வட்டார சுகாதாரத்துறையினர் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டுக்கொண்டு இருந்தனர். அதன் ஒரு பகுதியாக அந்த வழியாக முககவசம் அணியாமல் வந்தவர்களுக்கு ரூ.200 அபராதம் விதித்தனர். மேலும் அபராதம் கட்ட தவறியவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்தனர்.
அப்போது அந்த வழியாக முககவசம் அணியாமல் வந்த பெண்ணை நிறுத்தி, முககவசம் அணியாமல் வந்ததற்காக அபராதம் அல்லது கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர். இதனால் அங்கு தகராறு ஏற்பட்டது. இதனிடையே அந்த பெண்ணின் கணவர் உள்பட 4 பேர் சேர்ந்து சுகாதாரத்துறையினரை தாக்கினர். இதில் அவர்கள் காயமடைந்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் பரமத்திவேலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பெண்ணின் கணவரை கைது செய்தனர். மேலும், அந்த பெண் உள்பட 4 பேரை தேடி வருகின்றனர்.
கோரிக்கை
இந்தநிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபடும் சுகாதாரத்துறையினருடன், போலீசாரும் இணைந்து செயல்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், நாமக்கல் மாவட்டத்தில் வேகமாக பரவி வரும் கொரோனாவை கட்டுப்படுத்தும் முயற்சியில் சுகாதாரத்துறையினர் இரவு, பகலாக ஈடுபட்டு வருகிறார்கள். ஆனால் இதற்கு பொதுமக்கள் மத்தியில் போதிய ஒத்துழைப்பு இல்லை.
மேலும், சுகாதாரத்துறையினருடன் பொதுமக்கள் அடிக்கடி தகராறில் ஈடுபடுகிறார்கள். எனவே சுகாதாரத்துறையினருடன், போலீசாரும் இணைந்து கொரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபடவேண்டும். அப்போது தான் அச்சமின்றி, தீவிரமாக தடுப்பு பணியில் ஈடுபட முடியும் என்றனர்.
Related Tags :
Next Story