மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் பக்தர்களின்றி நடந்தது
ஊஞ்சல் உற்சவம்
மேல்மலையனூர்,
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் பிரசித்திபெற்ற அங்காளம்மன் கோவில் உள்ளது. இங்கு மாதந்தோறும் அமாவாசை அன்று இரவு ஊஞ்சல் உற்சவம் வெகுவிமரிசையாக நடைபெறும். இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்வார்கள்.
கொரோனா தொற்று அதிகரிப்பு காரணமாக அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தை நடத்த மாவட்ட நிர்வாகம் தடை விதித்திருந்தது. மேலும் பக்தர்களின்றி கோவில் உட்பிரகாரத்தில் ஊஞ்சல் உற்சவம் நடத்தி கொள்ளலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டிருந்தது.
அதன்அடிப்படையில் பங்குனி மாத அமாவாசையான இன்று கோவில் உட்பிரகாரத்தில் ஊஞ்சல் உற்சவம் நடந்தது. இதையொட்டி இரவு 7.45 மணிக்கு உற்சவ அம்மன் ஐந்து தலை நாகத்தின் கீழ் அனந்தசயன கோலத்தில் ஊஞ்சலில் எழுந்தருளினார். அதன்பிறகு பூசாரிகள் பக்தி பாடல்களை பாடியவுடன் ஊஞ்சலில் அம்மன் முன்னும் பின்னும் அசைந்தாடியபடி அருள்பாலித்தார். அதைத்தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அர்ச்சனை செய்து, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
முன்னதாக காலையில் கருவறையில் உள்ள அம்மனுக்கும் சிவபெருமானுக்கும் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் அம்மன், சிவபெருமான் தங்க கவச அலங்காரத்தில் அருள்பாலித்தனர். கொரோனா தொற்று பரவாமல் இருக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊஞ்சல் உற்சவத்தில் பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதி வழங்கப்படவில்லை. விழாவுக்கான ஏற்பாடுகளை அறநிலையத்துறை உதவி ஆணையர் ராமு, அறங்காவலர்கள் சரவணன் பூசாரி, செந்தில்குமார் பூசாரி, தேவராஜ் பூசாரி, ராமலிங்கம் பூசாரி, செல்வம் பூசாரி, வடிவேல் பூசாரி, சந்தானம் பூசாரி, ஆய்வாளர் அன்பழகன், கண்காணிப்பாளர் கோவிந்தராஜி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story