காய்ச்சல் இருக்கும் சுற்றுலா பயணிகளை தங்கும் விடுதிக்குள் அனுமதிக்கக்கூடாது
காய்ச்சல் இருக்கும் சுற்றுலா பயணிகளை தங்கும் விடுதிக்குள் அனுமதிக்கக்கூடாது என்று அதன் உரிமையாளர்களுக்கு நகராட்சி ஆணையாளர் அறிவுரை வழங்கினார்.
ஊட்டி,
ஊட்டி நகராட்சியில் கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றுவது, புதிய கட்டுப்பாடுகள் குறித்து வியாபாரிகள், திருமண மண்டப உரிமையாளர்கள், தங்கும் விடுதி உரிமையாளர்களுடன் நகராட்சி கூட்டரங்கில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு நகராட்சி ஆணையாளர் சரஸ்வதி தலைமை தாங்கி பேசும்போது கூறியதாவது:-
சுற்றுலா நகரமாக ஊட்டி உள்ளதால் சுற்றுலா பயணிகள் அதிகம் பேர் வந்து செல்கின்றனர். கொரோனா பரவலை தடுக்க தங்கும் விடுதிகளில் சுற்றுலா பயணிகளுக்கு கிருமிநாசினி வழங்கி, அடிக்கடி கைகளை சுத்தப்படுத்த அறிவுறுத்த வேண்டும்.
50 சதவீதம் பேர்
அவர்கள் கட்டாயம் முககவசம் அணிவதை உறுதி செய்ய வேண்டும். உடலில் வெப்பநிலை அதிகமாக இருந்தால் மற்றும் காய்ச்சல் இருந்தால் தங்கும் விடுதிக்குள் அனுமதிக்கக்கூடாது. தங்கும் விடுதிகள், காட்டேஜ்களில் சுற்றுலா பயணிகள் கூடாமல், 50 சதவீதம் பேர் இருக்கும் வகையில் கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டும்.
திருமண நிகழ்ச்சிகளுக்கு வருவாய் கோட்டாட்சியரிடம் அனுமதி கோரி விண்ணப்பித்து அனுமதி பெற வேண்டும். இதில் 100 பேர் மட்டும் கலந்துகொள்ள வேண்டும். இதனை திருமண மண்டப உரிமையாளர்கள் உறுதி செய்ய வேண்டும்.
தடுப்பூசி முகாம்
நகராட்சி மார்க்கெட், வணிக வளாகங்களில் உள்ள கடைகளில் வியாபாரிகள் 50 சதவீத வாடிக்கையாளர்களை மட்டும் அனுமதிக்க வேண்டும். அவர்கள் முககவசம் அணிவதை உறுதி செய்ய வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்காத கடைகள், தனியார் நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். நோய் தொற்றை பரப்பும் வகையில் சரியான விதத்தில் முககவசம் அணியாமல் இருந்தால் ரூ.200 அபராதம் விதிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து ஊட்டி நகராட்சியில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்கள், அலுவலர்கள், ஊழியர்களுக்கு 2-வது டோஸ் தடுப்பூசி போடும் முகாம் நடந்தது. இதில் 100-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.
Related Tags :
Next Story