கோடை வெயிலை சமாளிக்க விழுப்புரத்தில் மண் பானைகள் விற்பனை மும்முரம்


கோடை வெயிலை சமாளிக்க  விழுப்புரத்தில் மண் பானைகள் விற்பனை மும்முரம்
x
தினத்தந்தி 11 April 2021 3:57 PM GMT (Updated: 11 April 2021 3:57 PM GMT)

கோடை வெயிலை சமாளிக்க விழுப்புரத்தில் மண் பானைகள் விற்பனை மும்முரமாக நடந்து வருகிறது.

விழுப்புரம், 

தமிழகத்தில் கோடை காலம் தொடங்குவதற்கு முன்பாகவே வெயில் சுட்டெரித்தது. தற்போது கடந்த சில வாரங்களாக வெயிலின் தாக்கம் மிகவும் அதிகமாக காணப்படுகிறது. இந்த வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க இளநீர், கரும்புச்சாறு, மோர் போன்றவற்றை பொதுமக்கள் பருகி ஓரளவு வெப்பத்தை தணித்து வருகின்றனர். அதுமட்டுமின்றி நீர்சத்து நிறைந்த தர்பூசணி பழம், வெள்ளரிப்பழம் ஆகியவற்றையும் சாப்பிட்டு வருகின்றனர். இதனால் எங்கு பார்த்தாலும் குளிர்பான கடைகளில் பொதுமக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. அதுபோல் சாலையோரம் உள்ள தர்பூசணி, வெள்ளரிக்காய் ஆகியவை விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள இடங்களிலும் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.

மண் பானைகள் விற்பனை

மேலும் கோடை வெயிலை சமாளிக்கும் வகையில் ஏழை, எளிய, நடுத்தர மக்களின் குளிர்சாதன பெட்டியாக திகழும் மண் பானைகள் விற்பனை மும்முரமாக நடந்து வருகிறது. விழுப்புரம் அருகே உள்ள சாலைஅகரம், ராகவன்பேட்டை ஆகிய இடங்களில் மண்பாண்ட தொழிலாளர்களால் தயார் செய்யப்பட்டு சாலையோரத்தில் மண் பானைகள் விற்பனைக்காக அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.
இங்கு சாதாரண மண் பானைகள், குழாய் பொருத்தப்பட்ட மண் பானைகள் மற்றும் சிறிய அளவிலான குடுவைகளும் விற்பனைக்காக உள்ளன. இதில் சாதாரண மண் பானைகள் ரூ.80-ல் இருந்து ரூ.200 வரையும், குழாய் பொருத்தப்பட்ட மண் பானைகள் ரூ.150-ல் இருந்து ரூ.350 வரையும், குடுவைகள் ரூ.50-ல் இருந்து ரூ.100 வரையும் விற்பனை செய்யப்படுகிறது. இவற்றை பொதுமக்கள் பலரும் ஆர்வமுடன் வாங்கிச்சென்ற வண்ணம் உள்ளனர்.

Next Story