விழுப்புரம் அருகே கொரோனா சிகிச்சை மையம் தயார் செய்யும் பணி கலெக்டர் அண்ணாதுரை ஆய்வு


விழுப்புரம் அருகே கொரோனா சிகிச்சை மையம் தயார் செய்யும் பணி கலெக்டர் அண்ணாதுரை ஆய்வு
x
தினத்தந்தி 11 April 2021 4:00 PM GMT (Updated: 11 April 2021 4:00 PM GMT)

விழுப்புரம் அருகே கொரோனா சிகிச்சை மையம் தயார் செய்யும் பணியை கலெக்டர் அண்ணாதுரை ஆய்வு செய்தார்.

விழுப்புரம், 

அதிகரிக்கும் கொரோனா தொற்று

விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றால்  பாதிப்போரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகளிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். தற்போது அதிகரிக்கும் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களுக்கு சிகிச்சை அளிக்க ஏதுவாக கடந்த ஆண்டு விழுப்புரம் மாவட்டத்தில் செயல்பட்ட கொரோனா தனிமை சிகிச்சை மையங்கள் அனைத்தும் சுத்தம் செய்யப்பட்டு, சிகிச்சை அளிக்க தயார் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் விழுப்புரம் அருகே உள்ள வி.ஆர்.எஸ். பொறியியல் கல்லூரி வளாகத்தில் கடந்த ஆண்டு இயங்கிய பழைய கொரோனா சிகிச்சை மையத்தை சுத்தம் செய்யும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த பணியை நேற்று மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதன்பிறகு அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

சுத்தம் செய்யும் பணி

கடந்த ஆண்டு ஏற்பட்ட கொரோனா பாதிப்பின்போது விழுப்புரம் மாவட்டத்தில் ஏற்படுத்தப்பட்ட தனிமைப்படுத்தப்பட்ட கொரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று பலர் குணமடைந்து சென்றனர். தற்போது கொரோனா வைரஸ் தொற்று மீண்டும் அதிகரித்து வரும் நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட கொரோனா வைரஸ் தனிமை சிகிச்சை மையங்கள் சுத்தம் செய்து கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. மேலும் அங்கு பயன்படுத்தப்பட்ட படுக்கைகளை மாற்றி புதிய படுக்கைகள் அமைத்து நோயாளிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் வைக்கும் பணி நடைபெற்று வருகின்றன. அதன்படி விழுப்புரம் மாவட்டத்தில் பயன்படுத்தப்பட்ட சிகிச்சை மையங்களில் ஒன்றான வி.ஆர்.எஸ். பொறியியல் கல்லூரியில் கொரோனா சிகிச்சை தனிமை மையம் தயார்செய்வதற்கான முன்னேற்பாடு பணிகள் நடந்து வருகிறது. இவ்வாறு கலெக்டர் அண்ணாதுரை கூறினார். ஆய்வின்போது. கூடுதல் கலெக்டர் ஸ்ரேயா பி.சிங், துணை போலீஸ் சூப்பிரண்டு நல்லசிவம் ஆகியோர் உடனிருந்தனர்.

Next Story