புதுச்சேரியில் புதிதாக 306 பேருக்கு கொரோனா பாதிப்பு; 2 பேர் பலி


புதுச்சேரியில் புதிதாக 306 பேருக்கு  கொரோனா பாதிப்பு; 2 பேர் பலி
x
தினத்தந்தி 11 April 2021 9:53 PM IST (Updated: 11 April 2021 9:53 PM IST)
t-max-icont-min-icon

புதுவையில் நேற்று முன்தினம் புதிதாக 306 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் 2 ஆண்கள் உயிரிழந்தனர்.

புதுச்சேரி, ஏப்.11-
புதுவையில் 2 வாரங்களில் இருமடங்காக கொரோனா தொற்று அதிகரித்துள்ளது. நேற்று புதிதாக 306 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் 2 ஆண்கள் உயிரிழந்தனர். 
இருமடங்காக அதிகரிப்பு 
புதுவை மாநிலத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இருப்பினும் கடந்த சில நாட்களாக தொற்று பரவும் வேகம் எகிறி வருகிறது. இதற்கு காரணம், பொதுமக்களிடையே உள்ள அலட்சியம் என்று கூறப்படுகிறது.
கடந்த மாதம் 28, 29, 30 ஆகிய தேதிகள் முறையே 128, 137, 125 என்று பாதிப்பு இருந்தது. தற்போது இதன் விகிதம் இரு மடங்காக அதிகரித்துள்ளது. அதாவது கடந்த 28-ந் தேதி 128 பேர் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் நேற்று 306 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
306 பேருக்கு கொரோனா
புதுவையில் நேற்று காலை 10 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில் 3 ஆயிரத்து 348 பேருக்கு தொற்று பரிசோதனை செய்யப்பட்டது. அவர்களில் 306 பேருக்கு தொற்று இருப்பது உறுதியானது. 206 பேர் குணமடைந்துள்ளனர்.
நேற்று முன்தினம் 2 பேர் பலியாகி உள்ளனர். அதாவது ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த காமராஜ் நகரை சேர்ந்த 67 வயது முதியவரும், காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த நிரவியை சேர்ந்த 44 வயது ஆணும் பலியானார்கள். இதனால் பலி எண்ணிக்கை 691 ஆக உயர்ந்துள்ளது.
92,821 பேருக்கு தடுப்பூசி 
மாநிலத்தில் இதுவரை 7 லட்சத்து 383 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் 44 ஆயிரத்து 43 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 511 பேர் ஆஸ்பத்திரிகளிலும், 1,805 பேர் வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 2 ஆயிரத்து 316 பேர் தொடர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை 41 ஆயிரத்து 36 பேர் குணமடைந்துள்ளனர்.
நேற்று  சுகாதார பணியாளர்கள் 207 பேர், முன்கள பணியாளர்கள் 155 பேர், பொதுமக்கள் 2,961 பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். ஒட்டுமொத்தமாக இதுவரை 92 ஆயிரத்து 821 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

Next Story