மேகமலை பழையகாடு அணையில் மூழ்கிய வாலிபர்


மேகமலை பழையகாடு அணையில் மூழ்கிய வாலிபர்
x
தினத்தந்தி 11 April 2021 10:08 PM IST (Updated: 11 April 2021 10:08 PM IST)
t-max-icont-min-icon

சின்னமனூர் அருகே மேகமலைக்கு சுற்றுலா வந்த வாலிபர் ஒருவர், அங்குள்ள பழையகாடு அணையில் மூழ்கினார். அவரை ேதடும் பணியில் தீயணைப்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

சின்னமனூர்:
சின்னமனூர் அருகே மேகமலைக்கு சுற்றுலா வந்த வாலிபர் ஒருவர், அங்குள்ள பழையகாடு அணையில் மூழ்கினார். அவரை ேதடும் பணியில் தீயணைப்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர். 
மருந்து விற்பனை பிரதிநிதி
தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே மேகமலை உள்ளது. பசுமை போர்த்திய தேயிலை தோட்டங்களுக்கு இடையே உள்ள இந்த மலை பகுதி சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது. இங்கு தமிழகம் மட்டுமின்றி, வெளிமாநிலங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகள் வருகை தருவார்கள். 
இந்தநிலையில் தேனி அருகே பழனிசெட்டிபட்டியை சேர்ந்த சங்கர் மகன் மதன் (வயது 29). மருந்து விற்பனை பிரதிநிதி. இவர், தன்னுடன் பணியாற்றும் வெளி மாவட்டங்களை சேர்ந்த 3 நண்பர்களுடன் நேற்று முன்தினம் மேகமலைக்கு சுற்றுலா சென்றார். 
அணையில் மூழ்கினார்
அங்கு மேகமலையில் உள்ள சுற்றுலா இடங்களையும், அணை பகுதிகளையும் அவர்கள் பார்வையிட்டனர். பின்னர் 4 பேரும் வெண்ணியாறு எஸ்டேட் பகுதியில் உள்ள பழையகாடு அணைக்கு சென்றனர். அப்போது மதன் மட்டும் அந்த அணையில் குளிக்க சென்றதாக கூறப்படுகிறது. இதில், அணையின் ஆழமான பகுதிக்கு சென்ற மதன், அணை நீரில் மூழ்கினார். 
இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது நண்பர்கள், உதவிக்காக அக்கம்பக்கத்தினரை அழைத்தனர். அதன்படி அங்கு வந்த பொதுமக்கள் சிலர், அணையில் மூழ்கிய மதனை காப்பாற்ற முயன்றனர். ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. 
தேடும் பணி தீவிரம்
உடனே இதுகுறித்து ஹைவேவிஸ் போலீஸ் நிலையத்திற்கும், உத்தமபாளையம் தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் அணையில் மூழ்கிய மதனை தேடி பார்த்தனர். ஆனால் நேற்று முன்தினம் இரவு 7 மணி வரை தேடியும் மதனை கண்டுபிடிக்க முடியவில்லை. 
இதற்கிடையே நேற்று 2-வது நாளாக மதனை தேடும் பணியில் தீயணைப்பு படையினர் ஈடுபட்டனர். ஆனால் நேற்றும் அவர் கிடைக்கவில்லை. இன்று (திங்கட்கிழமை) 3-வது நாளாக அவரை தேடும் பணியில் தீயணைப்பு படையினர் ஈடுபட உள்ளனர். 
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக ஹைவேவிஸ் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story