தேசிய துப்புரவு பணியாளர் ஆணைய தலைவர் ஆய்வு
நாகையில் தீயில் எரிந்து 20 வீடுகள் நாசமடைந்த பகுதியில் தேசிய துப்புரவு பணியாளர் ஆணைய தலைவர் ஆய்வு செய்தார்.
நாகப்பட்டினம்;
நாகையில் தீயில் எரிந்து 20 வீடுகள் நாசமடைந்த பகுதியில் தேசிய துப்புரவு பணியாளர் ஆணைய தலைவர் ஆய்வு செய்தார்.
தீ விபத்து
நாகை காட்டுநாயக்கன் தெருவில் கடந்த 9-ந்தேதி நடந்த தீ விபத்தில் 20 வீடுகள் நாசமடைந்தன. மேலும் வீடுகளில் இருந்த டிவி, மின்விசிறி, செல்போன், துணிகள், சமையல் பாத்திரங்கள், பாட புத்தகங்கள், கல்வி சான்றிதழ்கள், வங்கி கணக்கு புத்தகங்கள், ஆதார், ரேஷன் கார்டுகள் மற்றும் பீரோவில் இருந்த நகை-பணம் உள்ளிட்ட பல லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்தன. எனவே பாதிக்கப்பட்ட பொதுமக்கள் தங்களுக்கு இழப்பீட்டு நிவாரணம் வழங்க கோரிக்கை விடுத்து வந்தனர்.
ஆவணங்கள் எரிந்து நாசம்
இந்தநிலையில் தீ விபத்து நடந்த காட்டு நாயக்கன் தெருவில் நேற்று தேசிய துப்புரவு பணியாளர் ஆணைய தலைவர் வெங்கடேஷ், நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். தீ விபத்தில் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு வீட்டுக்கும் நேரில் சென்று உரிமையாளர்களிடம் பாதிப்பு குறித்து கேட்டறிந்தார். அப்போது பாதிக்கப்பட்டவர்கள் கூறியதாவது:-
தீ விபத்தில் ரேஷன் கார்டு, ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தகம், வீட்டு பத்திரம் உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள், பணம் நகை உள்ளிட்ட அனைத்தும் எரிந்து நாசமடைந்து விட்டது. பாதிக்கப்பட்ட எங்களுக்கு புதிய வீடு கட்டி தரவேண்டும். தற்காலிக துப்புரவு பணியாளர்களை பணிநிரந்தரம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். காட்டு நாயக்கன் தெரு அருகே மெயின் ரோட்டில் உள்ள டாஸ்மாக் கடையை அப்புறப்படுத்த வேண்டும் என கூறினர்.
உணவு தயார் செய்யும் இடம்
அப்போது அவர், உங்கள் கோரிக்கை குறித்து பரிசீலனை செய்யப்பட்டு, விரைவில் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார். இதைத்தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு தயார் செய்யும் இடத்துக்கு சென்று தேசிய துப்புரவு பணியாளர் ஆணைய தலைவர் பார்வையிட்டார். ஆய்வின்போது மாவட்ட கலெக்டர் பிரவீன் நாயர், மாவட்ட வருவாய் அலுவலர் இந்துமதி, நகராட்சி ஆணையர் ஏகராஜ், தாசில்தார் முருகு உள்ளிட்ட அதிகாரிகள் இருந்தனர்.
Related Tags :
Next Story