திசையன்விளை மார்க்கெட்டில் முருங்கைக்காய் விலை வீழ்ச்சி
திசையன்விளை மார்க்கெட்டில் முருங்கைக்காய் விலை வீழ்ச்சி அடைந்தது. ஒரு கிலோ ரூ.4-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
திசையன்விளை, ஏப்:
திசையன்விளை மார்க்கெட்டில் முருங்கைக்காய் விலை வீழ்ச்சி அடைந்து உள்ளது. ஒரு கிலோ ரூ.4-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
திசையன்விளை முருங்கைக்காய்
நெல்லை மாவட்டம் திசையன்விளை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் அதிக அளவில் சொட்டு நீர் பாசனம் மூலம் முருங்கை பயிரிடப்பட்டுள்ளது. இவைகளில் செடி முருங்கை, குரூஸ் வகை, அழகிய விளை ரகம் என பல்வேறு வகையான முருங்கைகள் பயிரிடப்பட்டுள்ளது.
இங்கு விளையும் முருங்கைக்காய்கள் தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களுக்கும், வெளி மாநிலங்களுக்கும் மற்றும் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதற்காக திசையன்விளையில் இருந்து தினமும் ஆம்னி பஸ்கள் மற்றும் லாரிகள் மூலம் பல்வேறு ஊர்களுக்கு முருங்கைக்காய்கள் அனுப்பி வைக்கப்படுகிறது.
விலை வீழ்ச்சி
கோடை கால வெயிலில் முருங்கைக்காய்கள் அதிகம் காய்க்கும். அப்போது விளைச்சல் அதிகமாக இருக்கும். அதுபோல் மழை காலங்களில் பூக்கள் உதிர்ந்துவிடும். அப்போது விளைச்சல் குறைவாக இருக்கும். அந்த சமயத்தில் ஒரு கிலோ முருங்கைக்காய் ரூ150 வரை விற்பனை செய்யப்படும்.
தற்போது கோடை வெயிலால் பூக்கள் உதிராமல் முருங்கைக்காய் விளைச்சல் அதிகமாக உள்ளது. மேலும் ஆண்டிப்பட்டி, ஒட்டன்சத்திரம் பகுதிகளிலும் விளைச்சல் அதிகம் உள்ளது. தேவைக்கு அதிகமாக உற்பத்தியானதால் முருங்கைக்காய் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.
தற்போது பனிபொழிவு உள்ளதால் முருங்கைக்காய்கள் நிறம் மாறியுள்ளது. இதனால் ஏற்றுமதி நடைபெறவில்லை. மேலும் கொரோனா விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளதால் திருமணம், கோவில் கொடை விழா மற்றும் சுப நிகழ்ச்சிகள் நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் திசையன்விளை மார்க்கெட்டில் ஒரு கிலோ முருங்கைக்காய் ரூ.4 முதல் ரூ.6 வரை விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை வீழ்ச்சியால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
Related Tags :
Next Story