கும்பகோணம் சாரங்கபாணிசாமி கோவில் சித்திரை தேரோட்டம் ரத்து
கொரோனா பரவல் காரணமாக கும்பகோணம் சாரங்கபாணி சாமி கோவிலில் வருகிற 26-ந் தேதி நடைபெற இருந்த சித்திரை தேரோட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
கும்பகோணம்:
கொரோனா பரவல் காரணமாக கும்பகோணம் சாரங்கபாணி சாமி கோவிலில் வருகிற 26-ந் தேதி நடைபெற இருந்த சித்திரை தேரோட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
சாரங்கபாணி கோவில்
108 திவ்ய தேசங்களில் மூன்றாவது தலமாகவும், ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட தலமாகவும், நாலாயிர திவ்விய பிரபந்தம் இயற்றப்பட்ட தலமாகவும் கும்பகோணம் சாரங்கபாணி சாமி கோவில் விளங்கி வருகிறது.
இந்த கோவிலில் தை முதல் நாளில் தைத்தேரோட்டமும், சித்திரை மாதம் பவுர்ணமியில் சித்திரை தேரோட்டமும் நடத்தப்படும். திருவாரூர் தியாகராஜசாமி கோவில், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலுக்கு அடுத்தபடியாக தமிழகத்தில் மிகப்பெரிய் தேரோட்டம் கும்பகோணம் சாரங்கபாணி கோவில் தேரோட்டம்தான்.
தேரோட்டம் ரத்து
இந்த தேரில் பிரம்மாண்டமான 4 குதிரைகள் பொருத்தப்பட்டு இருக்கும். அந்த குதிரைகள் தேரோட்டத்தின்போது ஆடி, அசைந்தபடி தேரில் பவனி வரும். இவ்வாறு பல்வேறு சிறப்புடைய கும்பகோணம் சாரங்கபாணி கோவில் தேரோட்டம் வருகிற 26-ந் தேதி(திங்கட்கிழமை) நடத்துவதற்கு கோவில் நிர்வாகம் திட்டமிட்டு இருந்தது. இதையொட்டி கடந்த மாதம் தேர் கட்டுமானப்பணிக்கான பந்தக்கால் முகூர்த்தம் நடந்தது.
இந்த நிலையில் கொரோனா நோய் பரவல் காரணமாக தமிழக அரசு கோவில் விழாக்களை நடத்த தடை விதித்தது. இதனால் சாரங்கபாணி கோவில் தேரோட்டம் ரத்து செய்யப்பட்டதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
பக்தர்கள் ஏமாற்றம்
தேரோட்டம் நடைபெற இருந்ததையொட்டி தேர் கட்டுமான பணிகள் அணைத்தும் தீவிரமாக நடந்து வந்தன. இந்த நிலையில் தேரோட்டம் ரத்து செய்யப்பட்டு விட்டதால் தேர் கட்டுமான பணிகள் அனைத்தும் நிறுத்தப்பட்டன. இதனால் தேர் கட்டுமான பணியில் ஈடுபட்டு இருந்த 50-க்கும் மேற்பட்ட தேர் கட்டமைப்பு வல்லுனர்கள் தேர் திருப்பணி பணிகளை கைவிட்டு வீடு திரும்பினர்.
கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக இந்த கோவில் தேரோட்டம் ரத்து செய்யப்பட்டது.
இந்த ஆண்டு தேரோட்டம் நடைபெறும் என பக்தர்கள் காத்திருந்த நிலையில் தொடர்ந்து 2-வது ஆண்டாக தேரோட்டம் ரத்து செய்ய்பபட்டதால் பக்தர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்து உள்ளனர்.
Related Tags :
Next Story