ஈரோட்டில் மீன் மார்க்கெட்டுகளுக்கு விடுமுறை இறைச்சி கடைகளில் பார்சல் மூலமாக கறி வினியோகம்
ஈரோட்டில் மீன் மார்க்கெட்டுகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. மேலும், இறைச்சி கடைகளில் பார்சல் மூலமாக கறி வினியோகம் செய்யப்பட்டது.
ஈரோடு
ஈரோட்டில் மீன் மார்க்கெட்டுகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. மேலும், இறைச்சி கடைகளில் பார்சல் மூலமாக கறி வினியோகம் செய்யப்பட்டது.
மீன் மார்க்கெட் விடுமுறை
கொரோனா பரவல் காரணமாக ஈரோடு மாவட்டத்தில் பொது மக்கள் அதிகமாக கூடுவதை தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் பொதுவாக இறைச்சி கடைகள், மீன் மார்க்கெட்டுகளில் மக்களின் கூட்டம் அலைமோதும். எனவே கொரோனா தொற்று பரவுவது குறையும் வரை ஞாயிற்றுக்கிழமைதோறும் மீன் மார்க்கெட்டுகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது.
அதன்படி ஈரோடு ஸ்டோனிபாலம் அருகில் உள்ள மீன் மார்க்கெட்டுக்கும், கருங்கல்பாளையம் காவிரி ரோட்டில் உள்ள மீன் மார்க்கெட்டுக்கும் நேற்று விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. இதேபோல் சம்பத்நகர் நசியனூர் ரோட்டில் செயல்படும் மீன் கடைகளுக்கும் விடுமுறை விடப்பட்டது. இதனால் மார்க்கெட் விடுமுறை பற்றிய தகவல் அறியாதவர்கள் மீன் வாங்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றார்கள். சில இடங்களில் தனியாக நடத்தப்படும் சாலையோர மீன் கடைகள் மட்டும் செயல்பட்டன.
இறைச்சி கடைகளுக்கு கட்டுப்பாடு
இறைச்சி கடைகளிலும் நோய் தடுப்பு விதிமுறைகளை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டு உள்ளது. கறியை பார்சல் செய்து மட்டுமே வழங்க வேண்டும். வாடிக்கையாளர்கள், கடைக்காரர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். வாடிக்கையாளர்களை கூட்டமாக நிற்க அனுமதிக்கக்கூடாது போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தன. அதன்படி ஈரோட்டில் உள்ள இறைச்சி கடைகளில் வாடிக்கையாளர்கள் வருவதற்கு முன்பே கறியை வெட்டி எடைக்கு ஏற்ப பார்சல் செய்து கடைக்காரர்கள் தயாராக வைத்திருந்தனர். இதனால் வாடிக்கையாளர்கள் வந்தபோது பணத்தை பெற்றுக்கொண்டு கறியை வினியோகம் செய்தார்கள். இறைச்சி கடைகளில் நோய் தடுப்பு விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா என்று மாநகராட்சி அதிகாரிகள் பல்வேறு குழுக்களாக பிரிந்து சோதனை நடத்தினார்கள். அப்போது கொரோனா தடுப்பு நடவடிக்கையை பின்பற்றாத இறைச்சி கடைகளுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்தனர்.
Related Tags :
Next Story