தலைவாசல் அருகே நகைக்கடையில் 5 கிலோ வெள்ளிப்பொருட்கள் கொள்ளை-பூட்டை உடைத்து புகுந்து மர்ம நபர்கள் துணிகரம்
தலைவாசல் அருகே நகைக்கடை பூட்டை உடைத்து மர்ம நபர்கள் உள்ளே புகுந்து அங்கிருந்த 5 கிலோ வெள்ளிப்பொருட்களை கொள்ளையடித்து சென்றனர்.
தலைவாசல்:
தலைவாசல் அருகே நகைக்கடை பூட்டை உடைத்து மர்ம நபர்கள் உள்ளே புகுந்து அங்கிருந்த 5 கிலோ வெள்ளிப்பொருட்களை கொள்ளையடித்து சென்றனர்.
இந்த துணிகர சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
நகைக்கடை
சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே வீரகனூர் மும்முடி பகுதியில் நகைக் கடை வைத்திருப்பவர் முத்துராஜ் (வயது 37). இவரது மனைவி இலக்கியப்பிரியா. இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். இவர்களது சொந்த ஊர் ஈரோடு மாவட்டம் பவானி ஆகும்.
கடந்த 8 மாதங்களுக்கு முன்பு மும்முடி பகுதிக்கு வந்து தங்கி அதே பகுதியில் நகைக்கடை வைத்து தொழில் செய்து வருகிறார். வழக்கமாக காலையில் 9 மணிக்கு கடையை திறந்து வியாபாரம் செய்வார். இரவு 10 மணிக்கு கடையை பூட்டி விட்டு செல்வார். இதேபோல் நேற்று முன்தினம் இரவு கடையை பூட்டி விட்டு சென்றார்.
கொள்ளை
நேற்று அதிகாலை 5.30 மணியளவில் நகைக்கடையின் அருகில் உள்ள ஓட்டல் கடை ஊழியர் ஓட்டலை திறக்க வந்தார். அப்போது அருகில் உள்ள நகைக்கடை பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததை பார்த்துள்ளார். இதுபற்றி நகைக்கடை உரிமையாளர் முத்துராஜூக்கு தகவல் தெரிவித்தார். உடனே முத்துராஜ் விரைந்து வந்து கடையை பார்த்தார். அப்போது நகைக்கடை பூட்டு உடைக்கப்பட்டு கடையில் கொள்ளை நடந்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுபற்றி அருகில் உள்ள தலைவாசல் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். தலைவாசல் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜ் மற்றும் போலீசார் நகைக்கடைக்கு வந்து பார்வையிட்டனர். துணை போலீஸ் சூப்பிரண்டு இம்மானுவேல் ஞானசேகர் கடைக்கு வந்து பார்வையிட்டு ஆய்வு செய்தார். சேலத்தில் இருந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கைரேகை பதிவுகளை சேகரித்தனர். சேலத்திலிருந்து மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. அது கடையில் இருந்து வீரகனூர் மெயின் ரோட்டில் ஆறகளூர் பிரிவு ரோடு வரை சென்று நின்று விட்டது.
5 கிலோ வெள்ளிப்பொருட்கள்
நேற்று முன்தினம் இரவு கடைக்கு வந்த மர்மநபர்கள் கடையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து 5 கிலோ வெள்ளிப்பொருட்களை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதன் மதிப்பு ரூ.3 லட்சத்து 50 ஆயிரம் ஆகும்.
தங்க நகைகள் கடையில் உள்ள பாதுகாப்பு பெட்டகத்தில் வைத்து பூட்டப்பட்டு இருந்தது. அந்த பெட்டகத்தை உடைக்க முடியாததால் தங்க நகைகள் கொள்ளை போகாமல் தப்பியது.
வலைவீச்சு
இந்த துணிகர சம்பவம் குறித்து தலைவாசல் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபா கனிக்கர் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு கொள்ளையர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். அந்த பகுதியில் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் மூலமும் போலீசார் துப்புதுலக்கி வருகிறார்கள்.
மும்முடியில் சாலையோரம் உள்ள நகைக்கடையில் கொள்ளை போன சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story