புதுச்சேரி மாநிலத்தில் நடந்த தடுப்பூசி திருவிழாவில் 7,172 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர்; சுகாதாரத்துறை செயலர் தகவல்
புதுச்சேரி மாநிலத்தில் நடந்த தடுப்பூசி திருவிழாவில் 7,172 பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டனர் என்று சுகாதாரத்துறை செயலர் அருண் தெரிவித்துள்ளார்.
தடுப்பூசி திருவிழா
புதுச்சேரி அரசு சுகாதாரத்துறை செயலர் அருண் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
கொரோனா பரவலை கட்டுப்படுத்த புதுவை அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக கொரோனா பரிசோதனை அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் மக்களை பாதுகாக்க இலவசமாக தடுப்பூசியும் மக்களுக்கு போடப்பட்டு வருகிறது. கொரோனா தடுப்பூசி தொடக்கத்தில் முன்களப்பணியாளர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு செலுத்தப்பட்டது.
இந்தநிலையில் புதுச்சேரி மக்கள் அனைவருக்கும் விரைவாக தடுப்பு சென்று அடைய வேண்டும். மக்கள் அனைவரும் பாதுகாப்பான, ஆரோக்கியமான வாழ்க்கையை உறுதி செய்ய வேண்டும் என்பதற்காக நேற்று முதல் நாளை மறுநாள் (புதன்கிழமை) வரை கொரோனா தடுப்பூசி திருவிழா முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி 100 மையங்களில் தடுப்பூசி போடப்படுகிறது.
7,172 பேர் தடுப்பூசி...தடுப்பூசி திருவிழாவின் முதல் நாளான நேற்று காலை 8 மணி முதல் இரவு 8 மணி நடந்த முகாமில், புதுச்சேரியில் 6,212 பேரும், காரைக்காலில் 765 பேரும், மாகியில் 86 பேரும், ஏனாமில் 109 பேரும் என மொத்தம் 7,172 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர்.
தடுப்பூசி போட்டவர்களில் யாருக்கும் எந்தவித பக்கவிளைவுகளும் ஏற்படவில்லை. இந்த தடுப்பூசி நாளை மறுநாள் வரை நடக்கிறது. இந்த வாய்ப்பை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.