ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேருக்கு பாதிப்பு: கொரோனா தொற்றுக்கு எலெக்ட்ரானிக்ஸ் கடை ஊழியர் உயிரிழப்பு பாதிக்கப்பட்ட பகுதியில் தடுப்புகளை அமைத்து அதிகாரிகள் ‘சீல்’


ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேருக்கு பாதிப்பு: கொரோனா தொற்றுக்கு எலெக்ட்ரானிக்ஸ் கடை ஊழியர் உயிரிழப்பு பாதிக்கப்பட்ட பகுதியில் தடுப்புகளை அமைத்து அதிகாரிகள் ‘சீல்’
x
தினத்தந்தி 12 April 2021 4:50 AM GMT (Updated: 12 April 2021 4:50 AM GMT)

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட கோட்டைக்கரையில் உள்ள அண்ணாநகர் 3-வது தெருவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கடந்த 5-ம் தேதி கண்டறியப்பட்டது.

கும்மிடிப்பூண்டி,

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட கோட்டைக்கரையில் உள்ள அண்ணாநகர் 3-வது தெருவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கடந்த 5-ம் தேதி கண்டறியப்பட்டது. இதில் தீவிர தொற்றால் பாதிக்கப்பட்ட கடைகளில் எலக்ட்ரானிக் பொருட்களை பழுது நீக்கும் வேலை பார்த்து வந்த சார்லஸ் (வயது 46) என்பவர் திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், கடந்த 8-ந் தேதி அவருக்கு கடுமையான மூச்சு திணறல் ஏற்பட்டதால், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அவரை உறவினர்கள் அனுமதித்தனர்.

இந்தநிலையில், அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை சார்லஸ் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடல் கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளின்படி கும்மிடிப்பூண்டி பைபாஸ் சாலையில் உள்ள கோரி மேடு பகுதியில் அடக்கம் செய்யப்பட்டது. இதற்கிடையே கொரோனா தொற்றால் உயிரிழந்த சார்லசின் குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது அவரது மனைவி மற்றும் மாமியார் ஆகிய 2 பேர் மட்டும் கொரோனாவிற்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தநிலையில், கொரோனா தாக்கத்தின் உயிரிழப்பு எதிரொலியாக கும்மிடிப்பூண்டி கோட்டக்கரையில் உள்ள அண்ணாநகர் 3-வது தெருவை பேரூராட்சி நிர்வாகத்தினர் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவித்து தடுப்புகளை அமைத்து அதிகாரிகள் சீல் வைத்து உள்ளனர்.

கும்மிடிப்பூண்டி வட்டார மருத்துவர் டாக்டர் கோவிந்தராஜ் தலைமையில் சுகாதாரத்துறையினர் அப்பகுதியில் முகாமிட்டு அங்கு உள்ள 20-க்கும் மேற்பட்ட வீடுகளில் கொரோனா பரிசோதனை செய்தனர்.


Next Story