திருவள்ளூரில் முககவசம் அணியாத 660 பேரிடம் ரூ.1¼ லட்சம் அபராதம் வசூல்; போலீசார் நடவடிக்கை
திருவள்ளூர் மாவட்டத்தில் வேகமாக பரவிவரும் கொரோனா வைரசை கட்டுப்படுத்த பல்வேறு கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
திருவள்ளூர்,
திருவள்ளூர் மாவட்டத்தில் வேகமாக பரவிவரும் கொரோனா வைரசை கட்டுப்படுத்த பல்வேறு கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே பொதுமக்கள் அனைவரும் கண்டிப்பாக முககவசம் அணிய வேண்டும். உரிய சமூக இடைவெளியை பின்பற்றி நடக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து நேற்று திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்தன் உத்தரவின் பேரில், திருவள்ளூர் துணை போலீஸ் சூப்பிரண்டு துரைபாண்டியன் தலைமையில் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் மற்றும் போலீசார் நேற்று திருவள்ளூர் பஸ் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த இருசக்கர, நான்கு சக்கர வாகன ஓட்டிகள், பஸ், வேன் கார், ஆட்டோ, கனரக வாகனங்கள் போன்றவற்றில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது வாகனங்களில் முககவசம் அணியாமல் வந்து அரசின் விதிமுறைகளை பின்பற்றாத 660 பேருக்கு ரூபாய் 200 வீதம் ரூ.1 லட்சத்து 32 ஆயிரம் அபராதம் விதித்தனர்.