ஜக்கனாரை ஊராட்சி தலைவர் உள்ளிருப்பு போராட்டம்


ஜக்கனாரை ஊராட்சி தலைவர் உள்ளிருப்பு போராட்டம்
x
தினத்தந்தி 12 April 2021 7:45 PM IST (Updated: 12 April 2021 7:47 PM IST)
t-max-icont-min-icon

வட்டார வளர்ச்சி அலுவலரை கண்டித்து ஜக்கனாரை ஊராட்சி தலைவர் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினார்.

கோத்தகிரி,

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஜக்கனாரையில்  மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் ஊராட்சி தலைவர், வார்டு உறுப்பினர்கள் கவனத்துக்கு கொண்டு வராமல் வளர்ச்சி பணிகளை அதிகாரிகள் மேற்கொண்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது.

இதையடுத்து ஒரே ஊராட்சியில் நீண்ட நாட்களாக பணியாற்றும் மேற்பார்வையாளர்களை மாற்ற அந்தந்த ஊராட்சி நிர்வாகங்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். அதன்படி ஜக்கனாரை ஊராட்சியில் பணியாற்றும் மேற்பார்வையாளரை மாற்றி தீர்மானம் கொண்டு வரப்பட்டது.  ஆனால் அதனை வட்டார வளர்ச்சி அலுவலர்(கிராம ஊராட்சி) நந்தகுமார் ஏற்றுக்கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.

உள்ளிருப்பு போராட்டம்

இதை கண்டித்து ஜக்கனாரை ஊராட்சி அலுவலகத்துக்குள் தலைவர் சுமதி சுரேஷ், துணைத்தலைவர் ஜெயந்தி மற்றும் வார்டு உறுப்பினர்கள் உள்பட 13 பேர் நேற்று காலை 10 மணியளவில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் வேல்முருகன், ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயபால் ஆகியோர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது வட்டார வளர்ச்சி அலுவலர் நந்தகுமாரிடம் பேசி ஊராட்சியில் மேற்கொள்ளப்படும் 

அனைத்து வளர்ச்சி பணிகளும் நிர்வாகத்தின் கவனத்துக்கு கொண்டு வரவும், மேற்பார்வையாளரை மாற்றவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டது.  இதை ஏற்று உள்ளிருப்பு போராட்டம் கைவிடப்பட்டது. 


Next Story