முககவசம் அணியாத 140 பேரிடம் அபராதம் வசூல்
முககவசம் அணியாத 140 பேரிடம் அபராதம் வசூலிக்கப்பட்டது.
ராமநாதபுரம்,
கொரோனா பரவலை தடுக்கும் வகையில் அரசு மீண்டும் பல கட்டுப்பாடுகளை விதித்து உள்ளதோடு முககவசம் அணிதல், சமூக இடைவெளி ஆகியவற்றை கடுமையாக பின்பற்ற உத்தரவிட்டுள்ளது. முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதித்து முககவசம் அணிவரை உறுதி செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. அரசின் இந்த உத்தரவினை தீவிரமாக அமல்படுத்தும் வகையில் மாவட்ட காவல்துறை சார்பில் தீவிர சோதனை நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக் உத்தரவிட்டுள்ளார். இதன்படி ராமநாதபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு வெள்ளைத்துரை மேற்பார்வையில் போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். சாலைகளில் முககவசம் அணியாமல் வாகனம் ஓட்டி வந்தவர்களை நிறுத்தி அரசின் உத்தரவின்படி அபராதம் விதித்ததோடு முககவசம் அணிவதன் அவசியம் குறித்து அறிவுரை வழங்கினர். இவ்வாறு நேற்று முன்தினம் ஒரே நாளில் ராமநாதபுரம் பகுதியில் போலீசார் நடத்திய சோதனையில் 140 பேரிடம் முககவசம் அணியாததற்காக அபராதம் விதித்து வசூலிக்கப்பட்டது. மேலும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் இருந்ததாக 13 பேரிடம் அபராதம் விதித்து வசூலிக்கப்பட்டது.
Related Tags :
Next Story