கடவுள் வேடமணிந்து வந்து மனு கொடுத்த நாடக கலைஞர்கள்
கலை நிகழ்ச்சிகளுக்கு அனுமதி வழங்கக்கோரி கடவுள் வேடமணிந்து வந்து திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நாடக கலைஞர்கள் மனு கொடுத்தனர்.
திண்டுக்கல்:
கலைஞர்கள்
தமிழகத்தில் கொரோனா மீண்டும் பரவத் தொடங்கியதால் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருக்கின்றன. இதில் அனைத்து வழிபாட்டு தலங்களிலும் திருவிழாவுக்கு தடை விதிக்கப்பட்டது.
இதனால் நாடகம், கரகாட்டம், ஆடல்-பாடல் உள்ளிட்ட மேடை கலை நிகழ்ச்சிகளை நடத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. அது கலைஞர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் அபாயம் உள்ளது.
எனவே, கட்டுப்பாடுகளுடன் கலை நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று, திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று கலைஞர்கள் திரண்டு வந்தனர்.
இதில் நாட்டுப்புற கலைஞர்கள், மேடை கலைஞர்கள், நாடக நடிகர்கள், இசை கலைஞர்கள் உள்ளிட்டோர் வந்தனர். அவர்களில் 2 பேர் சிவபெருமான், பார்வதி வேடமணிந்து வந்தனர். மேலும் 2 பேர் கரகாட்டம் ஆடியபடி வந்தனர்.
கோரிக்கை மனு
இதையடுத்து அவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு கொடுத்தனர். அதில், கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளால் கடந்த ஆண்டு எங்களுடைய கலைத்தொழில் முழுமையாக பாதிக்கப்பட்டது.
தற்போது ஒன்றிரண்டு நிகழ்ச்சிகள் மூலம் ஓரளவு வருவாய் கிடைத்து வருகிறது. இதற்கிடையே மீண்டும் கட்டுப்பாடுகளை விதித்து இருப்பது எங்களை நிலைகுலைய வைத்துள்ளது.
எங்களின் வாழ்வாதாரம் முழுவதும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. அதன்மூலம் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வாழ்வதற்கு வழியின்றி தவிக்க நேரிடும்.
எனவே, கொரோனா கட்டுப்பாடுகளுடன் கலை நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு அனுமதி அளிக்க வேண்டும். அவ்வாறு கட்டுப்பாடுகளுக்கு தளர்வு அளிக்காதபட்சத்தில் கலைஞர்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் நிவாரணமாக வழங்க வேண்டும், என்று கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story