வடலூர், பண்ருட்டி, நெல்லிக்குப்பம் பகுதியில் திடீர் மழை


வடலூர், பண்ருட்டி, நெல்லிக்குப்பம் பகுதியில் திடீர் மழை
x
தினத்தந்தி 12 April 2021 10:05 PM IST (Updated: 12 April 2021 10:05 PM IST)
t-max-icont-min-icon

வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் வடலூர், பண்ருட்டி, நெல்லிக்குப்பம் பகுதியில் திடீரென மழை பெய்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

நெல்லிக்குப்பம், 

கடலூர் மாவட்டத்தில் வெப்பத்தின் தாக்கம் கடந்த மாதத்தின் தொடக்கத்தில் இருந்தே அதிகரிக்க தொடங்கியது. ஒவ்வொரு நாளும் வெயிலின் கோரத்தாண்டவத்தால் பிற்பகலில் மக்கள் வீட்டிற்குள்ளேயே முடங்கினர். 100 டிகிரியையும் தாண்டி வெயில் கொளுத்தியதாலும், அனல் காற்று வீசியதாலும் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர். வெயில் சுட்டெரித்ததால் தண்ணீர் பாய்ச்சிய மறுநாளே பயிர்களும் வாடத்தொடங்கியது. வெப்பத்தை சமாளிக்க முடியாமல் நீர்ச்சத்துகள் நிறைந்த பழங்களை பொதுமக்கள் வாங்கி சாப்பிட்டனர். கோடை மழை பெய்யாதா? என்ற ஏக்கத்தில் பொதுமக்களும், விவசாயிகளும் இருந்தனர். 

மழை 

இந்த நிலையில் குமரிக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. 
அதன்படி கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம், மேல்பட்டாம்பாக்கம், காராமணிக்குப்பம், நத்தப்பட்டு, கீழ் பட்டாம்பாக்கம், வாழப்பட்டு, திருக்கண்டேஸ்வரம், பண்ருட்டி, வடலூர், ஸ்ரீமுஷ்ணம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று காலை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. முதலில் லேசான மழை பெய்யத்தொடங்கியது. பின்னர் ஒரு மணி நேரம் பலத்த மழையாக கொட்டித்தீர்த்தது. 

பெருக்கெடுத்து ஓடிய சாக்கடை நீர்

ஸ்ரீமுஷ்ணத்தில் நேற்று காலை 11 மணிக்கு தொடங்கிய மழை ஒரு மணி நேரம் வெளுத்து வாங்கியது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.  ஸ்ரீமுஷ்ணம் பழைய போலீஸ் நிலையம் அருகில் வடிகால் வாய்க்கால்கள் முறையாக தூர்வாரி பராமரிக்கப்படாததால், சாக்கடை நீர் பிளாஸ்டிக் கழிவுகளுடன் சாலையில் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் மிகவும் சிரமப்பட்டனர். இந்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

Next Story