முக கவசம் அணியாதவர்களிடம் ரூ.10½ லட்சம் அபராதம் வசூல்
கடலூர் மாவட்டத்தில் முக கவசம் அணியாதவர்கள் மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிக்காதவர்களிடம் ரூ.10½ லட்சம் அபராத தொகையை போலீசார் வசூல் செய்துள்ளனர்.
கடலூர்,
தமிழகத்தில் கொரோனா தொற்று மீண்டும் மின்னல் வேகத்தில் அதிகரித்து வருவதன் காரணமாக புதிய கட்டுப்பாடுகளை அரசு விதித்துள்ளது. அதன்படி வீட்டில் இருந்து வெளியே வரும் பொதுமக்கள் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி கட்டாயம் முக கவசம் அணிவதோடு, சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்றும், தவறும்பட்சத்தில் அபராதம் விதிக்கப்படும் என்றும் அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதன்படி வீட்டில் இருந்து வெளியே வரும் பொதுமக்கள் முக கவசம் அணிந்து வருகிறார்களா என்று காவல்துறையினர், சுகாதாரத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருவதோடு, முக கவசம் அணியாமல் சுற்றித்திரிபவர்களுக்கு அதே இடத்திலேயே அபராத தொகையை வசூலிக்கும் பணியிலும் ஈடுபட்டுள்ளனர்.
அபராத தொகை
அந்த வகையில் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ் மேற்பார்வையில் மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர வாகன சோதனையிலும், ரோந்து பணியிலும் ஈடுபட்டு முக கவசம் அணியாதவர்களுக்கும், சமூக இடைவெளியை கடைபிடிக்காதவர்களுக்கும் அபராதம் விதித்து வருகின்றனர்.
அதன்படி கடந்த 9-ந் தேதி முதல் நேற்று மாலை வரை நடந்த சோதனையில் முக கவசம் அணியாமல் சுற்றித்திரிந்த 5,733 பேருக்கும், சமூக இடைவெளியை கடைபிடிக்காத 145 பேருக்கும் போலீசார் அபராதம் விதித்துள்ளனர். இவர்களிடம் இருந்து இதுவரை ரூ.10 லட்சத்து 64 ஆயிரம் வசூலிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story