கூடலூரில் குடிநீர் கேட்டு சாலை மறியல்
கூடலூரில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கூடலூர்:
கூடலூர் நகராட்சியில் மொத்தம் 21 வார்டுகள் உள்ளன. இப்பகுதி மக்களுக்கு லோயர்கேம்பில் இருந்து கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதற்கிடையே லோயர்கேம்பில் இருந்து கூடலூருக்கு வரும் குடிநீர் குழாய்களில் அடிக்கடி உடைப்பு ஏற்பட்டது. இதனால் கூடலூர் பகுதியில் குடிநீர் வினியோகம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டு, கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த 2 வாரங்களாக சரிவர குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை.
இந்தநிலையில் கூடலூர் கரிமேட்டுப்பட்டி பகுதியில் கடந்த 10 நாட்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் குடிநீர் கிடைக்காமல் அவதியடைந்தனர். இதையடுத்து நேற்று காலை அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள், அங்குள்ள கம்பம்-கூடலூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த கூடலூர் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜேம்ஸ் ஜெயராஜ் தலைமையிலான போலீசார் மற்றும் நகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது, குடிநீர் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டதால் சரிவர குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இனிவரும் காலங்களில் 3 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வினியோகம் செய்யப்படும். மேலும் நாளை (புதன்கிழமை) கரிமேட்டுப்பட்டிக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்தனர். இதைத்தொடர்ந்து மறியலை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story