உர விலை உயர்வை கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
விருத்தாசலம், திட்டக்குடி, பெண்ணாடத்தில் உர விலை உயர்வை கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
விருத்தாசலம்,
மத்திய அரசு டி.ஏ.பி., காம்ப்ளக்ஸ் உள்ளிட்ட உரங்களுக்கான மானியத்தை நிறுத்தியது. இதனால் உரங்களின் விலை ஒரு மூட்டைக்கு ரூ.700 வரை உயர்ந்துள்ளது. உதாரணமாக கடந்த மாதம் ரூ.1,200-க்கு விற்ற 50 கிலோ டி.ஏ.பி. உரம், தற்போது ரூ.1,900-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் உரங்களின் விலை உயர்வை கண்டித்தும், விலை உயர்வை கட்டுப்படுத்தக்கோரியும் மாவட்டம் முழுவதும் தொடர் போராட்டம் நடத்தப்படும் என விவசாயிகள் சங்கத்தினர் அறிவித்து இருந்தனர்.
அதன்படி நேற்று முன்தினம் முதல் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் நேற்று 2-வது நாளாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் கடலூர் குப்பம் குளத்தில் உள்ள வயலில் இறங்கி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டக்குழு உறுப்பினர் பழனி தலைமை தாங்கினார்.
இதில் விவசாய சங்க மாவட்ட செயலாளர் மாதவன், மாவட்ட பொருளாளர் தஷ்ணாமூர்த்தி, சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் கருப்பையா, நகர செயலாளர் அமர்நாத், ஒன்றிய செயலாளர் ராஜேஷ்கண்ணா, பால்கி, பாக்கியராஜ், பக்கிரான், ஏழுமலை, கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டு உரங்களின் விலையை கட்டுப்படுத்தக் கோரி கண்டன கோஷங்களை எழுப்பினர்.
தட்டுப்பாடு
விருத்தாசலம் பகுதியில் உர விலை உயர்வால் ஏற்கனவே கொள்முதல் செய்த உர மூட்டைகளை விற்பனையாளர்கள் பதுக்கி வைத்துள்ளனர். இதனால் உர மூட்டைகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. விலை உயர்வை கட்டுப்படுத்தக்கோரியும், தட்டுப்பாடின்றி உர மூட்டைகள் கிடைக்க வழிவகை செய்யக்கோரியும் விருத்தாசலம் அடுத்த பரவலூர் கிராமத்தில் விவசாயிகள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். பருவநிலை மாற்றம், பருவம் தவறிய மழை, தொடர் மழை, பூச்சி தாக்குதல், ஆள் பற்றாக்குறை, மின்சார பற்றாக்குறை என பல சிக்கல்களுக்கு இடையே விவசாயம் செய்து தங்களுக்கு அரசு உதவ வேண்டும், உர விலை உயர்வை குறைக்க வேண்டும் என்று கோஷமிட்டனர்.
திட்டக்குடி-பெண்ணாடம்
திட்டக்குடி பஸ் நிலையத்தில் தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்க விவசாய சங்க வட்ட செயலாளர் மகாலிங்கம், தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் நகர செயலாளர் வரதன், கரும்பு சங்க தலைவர் ஜெயபால், விவசாய சங்க தலைவர் புகழேந்தி உள்பட பலர் கலந்து கொண்டு உர விலை உயர்வை கண்டித்து கோஷமிட்டனர்.
தமிழ்நாடு விவசாய சங்கத்தின் பெண்ணாடம் வட்டார தலைவர் ராஜேந்திரன் தலைமையில் பெண்ணாடம் பழைய பஸ் நிலையத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் விவசாய சங்க மாவட்ட தலைவர் ரவிச்சந்திரன், கரும்பு சங்க தலைவர் மாணிக்கவேல், நிர்வாகிகள் பாலகிருஷ்ணன், கலியமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். திட்டக்குடி, தொளார், கோனூர், குடிக்காடு மற்றும் பெண்ணாடம் பகுதி விவசாயிகள் கலந்து கொண்டு மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோஷமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Related Tags :
Next Story