ஆண்டிப்பட்டி ஒன்றிய அலுவலகத்தில் ஒப்பந்ததாரர்கள் காத்திருப்பு போராட்டம்
நிலுவையில் உள்ள நிதியை வழங்கக்கோரி ஆண்டிப்பட்டி ஒன்றிய அலுவலகத்தில் ஒப்பந்ததாரர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆண்டிப்பட்டி:
ஆண்டிப்பட்டி ஒன்றிய அலுவலகம் மூலம் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின்கீழ் கழிப்பறை, தடுப்பணை, தெருக்களில் பேவர் பிளாக் கற்கள் பதித்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளுக்கு மூலப்பொருட்கள் ஒப்பந்ததாரர்கள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் கடந்த ஓராண்டாகவே 100 நாள் வேலை திட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட பணிகளுக்கு மூலப்பொருட்கள் வழங்கியதற்கான நிதியை அரசு வழங்கவில்லை என்று கூறப்படுகிறது. குறிப்பாக ஆண்டிப்பட்டி ஒன்றியத்தில் மட்டும் ரூ.2 கோடியே 29 லட்சத்து 47 ஆயிரம் நிதி வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் நிலுவையில் இருக்கும் நிதியை உடனடியாக வழங்க வேண்டும் என்று ஒப்பந்ததாரர்கள் தொடர்ந்து அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதைத்தொடர்ந்து நிலுவையில் உள்ள நிதியை வழங்கக்கோரி ஆண்டிப்பட்டி ஒன்றிய அலுவலகத்தில் நேற்று ஒப்பந்ததாரர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த 100 நாள் வேலைத்திட்டத்தின் உதவி திட்ட இயக்குனர் உலகநாதன், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது ஓரிரு வாரத்தில் மூலப்பொருட்களுக்கான நிதி அந்தந்த ஒப்பந்ததாரர்களுக்கு வழங்கப்படும் என்று உறுதியளித்தார். இதையடுத்து ஒப்பந்ததாரர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். முன்னதாக தங்களது கோரிக்கை மனுவை அதிகாரிகளிடம் வழங்கினர்.
Related Tags :
Next Story