வேலூர் அருகே நடந்த தொழிலாளி கொலையில் திடீர் திருப்பம் பணத்துக்காக தங்கையின் கணவரே கொன்றது அம்பலம்


வேலூர் அருகே நடந்த தொழிலாளி கொலையில் திடீர் திருப்பம் பணத்துக்காக தங்கையின் கணவரே கொன்றது அம்பலம்
x
தினத்தந்தி 12 April 2021 10:43 PM IST (Updated: 12 April 2021 10:43 PM IST)
t-max-icont-min-icon

வேலூர் அருகே தொழிலாளி சாவில் திடீர் திருப்பமாக, பணத்துக்கு ஆசைப்பட்டு அவரை, தங்கையின் கணவரே கொலை செய்தது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

வேலூர்

தொழிலாளி கொலை

வேலூரை அடுத்த சித்தேரி ெரயில்வே கேட் அருகே விவசாய கிணறு உள்ளது. இந்தக் கிணற்றில் கடந்த 10-ந் தேதி இரவு துர்நாற்றம் வீசியது. அப்பகுதி மக்கள் கிணற்றுக்குள் பார்த்தபோது ஆண் பிணம் ஒன்று அழுகிய நிலையில் மிதந்தது. இதுகுறித்து அவர்கள் வேலூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் சென்று உடலை மீட்டனர். அப்போது இறந்தவரின் கை, கால்கள் கயிற்றால் கட்டப்பட்டு இருந்தது.
இதுபற்றி தகவல் அறிந்தும் அரியூர் போலீசார், இன்ஸ்பெக்டர் சுபா தலைமையில் சென்று இறந்த நபரின் உடலை பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 
மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து இறந்தவர் யார்?, அவரை கொலை செய்தது யார்? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினர்.

ஆட்டோ டிரைவர் கைது

இந்த விசாரணையில் இறந்த நபர் வேலூர் கஸ்பா, பையர்லைனை சேர்ந்த கூலித்தொழிலாளியான ராஜா (வயது 34) என்பது தெரியவந்தது. மேலும் அவரைகொலை செய்தது தொரப்பாடி எழில்நகரை சேர்ந்த ராஜாவின் தங்கை கணவரான குமார் (37) என்பதும் தெரியவந்தது. அதைத்தொடர்ந்து அவரை போலீசார் கைதுசெய்து தொடர்ந்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் பல திடுக்கிடும் தகவல் வெளியாகியது.
இதுகுறித்து போலீசார் கூறியதாவது:-

ராஜாவின் தாயார் பெயர் லட்சுமி (60). இவர் மாநகராட்சியில் துப்புரவு தொழிலாளியாக பணியாற்றி, கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் பணியின் போது இறந்து விட்டார். இவருக்கு உஷா (33) என்ற மகளும் உண்டு. உஷாவின் கணவர் தான் குமார். குமார் ஆட்டோ டிரைவராக பணியாற்றி வந்துள்ளார். லட்சுமி இறந்ததால் அவருக்கு ரூ.6 லட்சம் பணப்பலன் வரவேண்டி இருந்தது. அந்த பணத்தை பெறுவதில் ராஜா காலதாமதப்படுத்தி வந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் பணம் பெறுவதில் ராஜாவுக்கும், குமாருக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டது.

பணத்துக்கு ஆசைப்பட்டு...

இதனால் ராஜா மீது குமார் ஆத்திரத்தில் இருந்தார். லட்சுமி பணியின் போது இறந்ததால் வாரிசு அடிப்படையின் அரசு பணி ராஜா அல்லது உஷாவுக்கு கிடைக்க வாய்ப்பு உள்ளதாக குமார் கருதினார். ராஜா இறந்து விட்டால் பணம் தனக்கு கிடைத்து விடும், அரசு பணியும் உஷாவுக்கு கிடைத்துவிடும் என குமார் ஆசைப்பட்டார். 
எனவே இதற்கு இடையூறாக உள்ள ராஜாவை கொலை செய்ய திட்டமிட்டார். அதன்படி கடந்த 7-ந் தேதி பென்னாத்தூருக்கு அழைத்துச் சென்று ராஜாவுக்கு மதுவாங்கி கொடுத்தார். இருவரும் சித்தேரி அருகே அமர்ந்து மதுகுடித்தனர். அளவுக்கு அதிகமாக மதுகுடித்ததால் ராஜா சுயநினைவை இழந்தார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்ட குமார், ராஜாவின் கை, கால்களை கயிற்றால் கட்டி அருகில் இருந்த கிணற்றில் தள்ளி கொலை செய்துள்ளார்.

Next Story