கரூர் அருகே வாலிபர் கொலை வழக்கு: மனைவி-கள்ளக்காதலன் உள்பட 5 பேர் கைது 3 ஆண்டுகளுக்கு பிறகு சிக்கினர்


கரூர் அருகே வாலிபர் கொலை வழக்கு: மனைவி-கள்ளக்காதலன் உள்பட 5 பேர் கைது 3 ஆண்டுகளுக்கு பிறகு சிக்கினர்
x
தினத்தந்தி 12 April 2021 11:54 PM IST (Updated: 12 April 2021 11:54 PM IST)
t-max-icont-min-icon

கரூர் அருகே 3 ஆண்டுகளுக்கு முன்பு வாலிபர் கொலை செய்யப்பட்ட வழக்கில், மனைவியின் கள்ளக்காதலன் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

கரூர்
ஆண் சடலம்
கரூர் பசுபதிபாளையம் போலீஸ் நிலையத்திற்குட்பட்ட புலியூர் மொடக்குசாலை அருகே காட்டுப்பகுதியில் கடந்த 2018-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் கை, கால்கள் வெட்டப்பட்ட நிலையில் வாலிபர் ஒருவர் பிணமாக கிடந்தார். இதுகுறித்து பசுபதிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு தனிப்படை அமைக்கப்பட்டு இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என விசாரணை நடத்தினர்.
குளிர்பான கடை உரிமையாளர்
விசாரணையில், பிணமாக கிடந்தவர் திருப்பூரில் குளிர்பான கடை நடத்தி வந்த சுப்புராஜ் (வயது 36). இவரது சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள தொப்பம்பட்டி என்பதும், இவருக்கு திருமணமாகி அன்னலெட்சுமி என்ற மனைவியும், தன்யாஸ்ரீ என்ற பெண் குழந்தையும், ஒரு ஆண் குழந்தையும், அன்னலெட்சுமியின் தாயார் ஜெயலலிதா ஆகியோருடன் வசித்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர்.
கறிக்கடை உரிமையாளர்
இதில், சுப்புராஜின் கடைக்கு அடிக்கடி வந்து சென்ற திருப்பூரில் அதே பகுதியில் கறிக்கடை நடத்தி வந்த கரூர் வெள்ளாளப்பட்டியை சேர்ந்த கனகராஜ் என்பவருடன், சுப்புராஜின் மனைவி மற்றும் குழந்தைகள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வெள்ளாளப்பட்டியில் உள்ள கனகராஜின் வீட்டிற்கு சென்று பார்த்தபோது, அங்கு யாரும் இல்லை. இதற்கிடையில் கடந்த 6-ந்தேதி ஓட்டுப்போட சொந்த ஊருக்கு கனகராஜ் வந்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் கனகராஜை பசுபதிபாளையம் போலீசார் கையும், களவுமாக பிடித்து கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினர். 
கள்ளத்தொடர்பு
போலீசாரின் விசாரணையில், அன்னலெட்சுமிக்கும், கனகராஜிக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. இதனால் சுப்புராஜ் தனது மனைவியை கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கனகராஜ், அன்னலெட்சுமியுடன் சேர்த்து சுப்புராஜை கொலை செய்ய திட்டம் தீட்டியுள்ளார். இதையடுத்து கனகராஜ் தனது நண்பர்களான பிரகாஷ், சந்தோஷ் ஆகியோருடன் சேர்ந்து கரூர் புலியூர் காட்டுப்பகுதிக்கு சுப்புராஜை வரவழைத்து கொலை செய்துள்ளார். பின்னர் திருப்பூரில் உள்ள கறிக்கடையை கனகராஜ் காலி செய்து விட்டு, தனது சொந்த ஊரான வெள்ளாளப்பட்டியில் அன்னலெட்சுமியுடன் குடும்பம் நடத்தி வந்துள்ளார். இதில் ஏற்பட்ட பிரச்சினையில் அன்னலெட்சுமி பிரிந்து சென்று விட்டார். இதனால் கனகராஜ் சென்னை சென்று ஆட்டோ ஓட்டி வந்ததும், தற்போது சொந்த ஊருக்கு வந்தபோது சிக்கி கொண்டதும் தெரியவந்துள்ளது. 
5 பேர் கைது
இந்த கொலை தொடர்பாக பசுபதிபாளையம் போலீசார் வழக்குப்பதிந்து, கள்ளக்காதலன் கனகராஜ், அன்னலெட்சுமி மற்றும் அவரது தாயார் ஜெயலலிதா, கனராஜின் நண்பர்கள் பிரகாஷ், சந்தோஷ் ஆகிய 5 பேரையும் கைது செய்து சிைறயில் அடைத்தனர். இந்த கொலை தொடர்பாக 5 பேர் 3 ஆண்டுகளுக்கு பிறகு கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story