கரூர் மாவட்ட பகுதிகளில் பலத்த மழை பொதுமக்கள் மகிழ்ச்சி


கரூர் மாவட்ட பகுதிகளில் பலத்த மழை பொதுமக்கள் மகிழ்ச்சி
x
தினத்தந்தி 12 April 2021 6:28 PM GMT (Updated: 12 April 2021 6:28 PM GMT)

கரூர் மாவட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கரூர்
பலத்த மழை
தமிழகம் முழுவதும் கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வாட்டி வருகிறது. இதில் கரூர் மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் சற்று அதிகரித்து காணப்பட்டது. இதனால் பொது மக்கள் மிகவும் அவதிப்பட்டு வந்தனர். இந்தநிலையில் நேற்று காலை முதலே வெயில் வாட்டிய நிலையில், மதியத்திற்கு மேல் கரூர் தாந்தோணிமலை சுங்ககேட், வெங்ககல்பட்டி, காந்திகிராமம் உள்ளிட்ட பகுதிகளில் திடீரென கருமேகங்கள் சூழ்ந்து அரைமணி நேரம் பலத்த மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் ஓடி தேங்கி நின்றது.   தாந்தோணிமலை சுங்ககேட் பகுதியில் பெய்த மழையால் மழைநீர் வழிந்தோடி மில்கேட்டில் இருந்து சுங்ககேட் செல்லும் சாக்கடை கால்வாயில் கலந்தது. இதனால் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு மழை நீருடன் சேர்ந்து சாக்கடைநீரும் சாலையில் அதிக அளவில் வழிந்தோடியது. இதனால் அப்பகுதி வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மற்றும் நடந்து சென்றவர்கள் அவதி அடைந்தனர்.
கிருஷ்ணராயபுரம்
கிருஷ்ணராயபுரம், மகாதானபுரம், கம்மநல்லூர், திருக்காம்புலியூர், மாயனூர் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மதியம் 3 மணி முதல் 4 மணி வரை பலத்த மழை கொட்டி தீர்த்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இந்த மழையால் பூமி குளிர்ந்து குளிர்ந்த காற்று வீசியது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர். 
வெள்ளியணை
வெள்ளியனை மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று காலையில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. மதியம் 3 மணி அளவில் வெள்ளியணை, மணவாடி, ஜெகதாபி, ஓந்தாம்பட்டி, செல்லாண்டி பட்டி, கத்தாழபட்டி மற்றும் சுற்றுப்பகுதிகளில் லேசான மழை பெய்தது. இதனால் குளிர்ச்சியான சூழ்நிலை ஏற்பட்டதால் பொது மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
க.பரமத்தி
க.பரமத்தி அருகே உள்ள சின்னதாராபுரத்தை சுற்றியுள்ள கூடலூர் மேற்கு, கூடலூர் கிழக்கு, சின்னதாராபுரம், தொக்குப்பட்டி, ராஜபுரம், புஞ்சைகாளிகுறிச்சி, நஞ்சைகாளிகுறிச்சி, எலவனூர், சூடாமணி, அணைப்பாளையம், தும்பிவாடி ஆகிய ஊராட்சிகளில் கடந்த ஒரு வாரமாக கடும் வெயில் வாட்டி வதைத்தது. இந்த நிலையில் நேற்று மாலை 3 மணியில் இருந்து 4 வரை ஒரு மணிநேரம் பலத்த மழை பெய்தது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Next Story