ரூ.16 ஆயிரம் லஞ்சம் வாங்கிய அரசு ஊழியர் சிக்கினார்


ரூ.16 ஆயிரம் லஞ்சம் வாங்கிய அரசு ஊழியர் சிக்கினார்
x
தினத்தந்தி 13 April 2021 12:23 AM IST (Updated: 13 April 2021 12:23 AM IST)
t-max-icont-min-icon

அரசு கொள்முதல் நிலையத்தில் ெநல் மூடைகளை கொள்முதல் செய்த ரூ.16 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஊழியரை மதுரையில் வைத்து சிவகங்கை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

சிவகங்கை,

அரசு கொள்முதல் நிலையத்தில் ெநல் மூடைகளை கொள்முதல் செய்த ரூ.16 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஊழியரை மதுரையில் வைத்து சிவகங்கை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

நெல் கொள்முதல் நிலையம்

சிவகங்கையை அடுத்த புல்லுகோட்டையில் நுகர்பொருள் வாணிப கழகத்தின் மூலம் அரசு நெல் கொள்முதல் நிலையம் செயல்படுகிறது. இங்கு சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தங்கள் நெல் மூடைகளை அரசிடம் நேரடியாக விற்பனை செய்து பயன்பெற்று வந்தனர். இங்கு விற்பனை செய்யும் நெல்லுக்குரிய தொகை விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும்.
 இந்த நெல் கொள்முதல் நிலையத்தில் மகேஸ்வரன் (வயது 45) என்பவர் கணக்காளராக பணிபுரிகிறார். இவர் தரும் ரசீதின் அடிப்படையில் தான் விவசாயிகளின் வங்கி கணக்கில் எத்தனை மூடை நெல் கொடுத்துள்ளார்களோ அதற்குரிய பணம் செலுத்தப்படும்.

லஞ்சம் கேட்டார்

இந்த நிலையில் புல்லுகோட்டை பகுதியை சேர்ந்த விவசாயி அருளானந்து என்பவர் தனக்கு சொந்தமான 540 நெல் மூடைகளை இந்த கொள்முதல் நிலையத்துக்கு கொண்டு வந்து கொடுத்தார். இந்த நெல்லை விலைக்கு எடுக்க ரூ.26 ஆயிரத்து 400 லஞ்சமாக கொடுக்கும்படி மகேஸ்வரன் கேட்டதாக ெதரிகிறது.
 பின்னர் பேரம் பேசியதில் ரூ.16 ஆயிரத்து 400 கொடுத்தால் போதும் என்று கூறி உள்ளார். இது குறித்து அருளானந்து சிவகங்கையில் உள்ள லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். இதையடுத்து அவரை கையும், களவுமாக பிடிக்க லஞ்ச ஒழிப்பு போலீசார் முடிவு செய்தனர்.

கைது

அதன்படி ரசாயன பவுடர் தடவப்பட்ட ரூ.16 ஆயிரத்து 400-ஐ எடுத்துக் கொண்டு அருளானந்து சென்றார். அப்போது மகேஸ்வரன் தான் மதுரையில் இருப்பதாகவும் அங்கு கொண்டு வந்து பணத்தை தரும்படியும் கூறி உள்ளார்.
இதைத்தொடர்ந்து அருளானந்து மதுரை தெப்பக்குளம் பகுதியில் இருந்த மகேஸ்வரனிடம் கொண்டு சென்று லஞ்சமாக கேட்ட பணத்தை கொடுத்தார். அப்போது அங்கு மறைந்து நின்றிருந்த லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு மணிமன்னன், இன்ஸ்பெக்டர்கள் குமாரவேலு, சந்திரன், சப்-இன்ஸ்பெக்டர் ராஜாமுகமது மற்றும் போலீசார், மகேஸ்வரனை அதிரடியாக கைது செய்தனர்.
பின்னர் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story