முதியவரை ஏமாற்றி வாக்களிக்க செய்த வாலிபர் மீது வழக்கு
ஜெயங்கொண்டம் தொகுதியில் முதியவரை ஏமாற்றி வாக்களிக்க செய்த வாலிபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தா.பழூர்:
முதியவரை ஏமாற்றி...
தேர்தலின்போது அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஒரு வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு செய்ய ஒரு முதியவர் வந்தார். அப்போது அவருக்கு உதவி செய்ய வந்த வாலிபர், முதியவர் கேட்ட சின்னத்திற்கு பதில் வேறு ஒரு சின்னத்ைத காட்டி, அதில் அந்த முதியவரை ஓட்டு போட வைத்து, அதனை செல்போனில் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டதாக கூறப்படுகிறது.
இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. இது குறித்து ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் கண்ணன், மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் ரத்னாவிடம் புகார் தெரிவித்தார். இதையடுத்து கலெக்டர் உத்தரவின்பேரில் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
போலீசார் விசாரணை
இந்நிலையில் போலீசார் விசாரணையில், அந்த வீடியோவில் இருந்த முதியவர் தா.பழூர் அருகே உள்ள நாயகனைப்பிரியாள் கிராமத்தை சேர்ந்த தம்புசாமி (85) என்பதும், தன்னால் நடக்க முடியாத நிலையில் அவர் தனக்கு உதவியாக அதே கிராமத்தை சேர்ந்த ராதாகிருஷ்ணன் மகன் மணிகண்டனை உதவிக்கு அழைத்துக்கொண்டு நாயகனைப்பிரியாள் கிராமத்தில் உள்ள வாக்குச்சாவடிக்கு சென்றதும், தெரியவந்தது.
மேலும் அங்கு மணிகண்டன் முதியவரை ஏமாற்றி அவர் கேட்ட சின்னத்திற்கு மாற்றாக வேறு சின்னத்தை காட்டி வாக்களிக்க செய்ததும், வாக்குப்பதிவு நிகழ்வினை செல்போன் மூலம் வீடியோ பதிவு செய்ததும், போலீசார் விசாரணையில் தெரியவந்தது.
தலைமறைவு
இதுகுறித்து ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் ஆனந்தன் கொடுத்த புகாரின்பேரில் தா.பழூர் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார். இந்நிலையில் மணிகண்டன் தலைமறைவாக உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story