முன்னாள் எம்.எல்.ஏ., மகன் உள்பட 5 பேருக்கு கொரோனா


முன்னாள் எம்.எல்.ஏ., மகன்  உள்பட 5 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 13 April 2021 1:50 AM IST (Updated: 13 April 2021 1:50 AM IST)
t-max-icont-min-icon

நாகர்கோவிலில் முன்னாள் எம்.எல்.ஏ. அவருடைய மகன் உள்பட 5 பேர் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

நாகர்கோவில்:
நாகர்கோவிலில் முன்னாள் எம்.எல்.ஏ. அவருடைய மகன் உள்பட 5 பேர் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 
கொரோனா பாதிப்பு
குமரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வரை கொரோனா தொற்று கட்டுக்குள் இருந்து வந்தது. சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இரு தினங்களுக்கு முன் ஒரே நாளில் 107 பேர் பாதிக்கப்பட்டனர். தற்போது 40 முதல் 50 என்ற எண்ணிக்கையில் பாதிப்பு இருந்து வருகிறது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு நாகர்கோவில் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. சுரேஷ்ராஜன் மகன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
முன்னாள் எம்.எல்.ஏ.
இந்த நிலையில் குளச்சல் தொகுதி முன்னாள் தி.மு.க. எம்.எல்.ஏ.வும், மீனவர் அணி மாநில செயலாளருமான ரா.பெர்னார்டுவுக்கு (வயது 80) சளி காய்ச்சல் போன்ற அறிகுறிகள் தென்பட்டதை தொடர்ந்து, கொரோனா பரிசோதனை செய்து கொண்டார். இதில் அவருக்கு தொற்று இருப்பது உறுதியானது.
இதையடுத்து அவர் நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இவருடைய 3-வது மகனும், குமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. வக்கீல் அணி துணை அமைப்பாளருமான தமிழ்நிதி, அவருடைய மனைவி. மகன், மகள் ஆகியோருக்கும் தொற்று ஏற்பட்டுள்ளது. இவர்களும் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
ஓட்டல் ஊழியர்கள்
இதேபோல் நாகர்கோவில் பீச் ரோடு பெரிய விளை பகுதியில் செயல்பட்டு வந்த ஒரு ஓட்டலில் பணியாற்றிய மூன்று பேருக்கு கொரோனா அறிகுறிகள் தென்பட்டதை அடுத்து அவர்கள் மூன்று பேருக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் அவர்களுக்கு தொற்று இருப்பது தெரியவந்தது. பின்னர் அவர்கள் 3 பேரும் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.
இதையடுத்து அவர்கள் பணியாற்றிய ஓட்டலில் மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் தியாகராஜன் தலைமையில் ஊழியர்கள் கிருமி நாசினி தெளித்து பூட்டினார். மேலும் அந்த மூன்று பேருடன் தொடர்பில் இருந்த மூன்று பேருக்கு இன்று கொரோனா பரிசோதனை மேற்கொள்ள சுகாதார துறையினர் முடிவு செய்துள்ளனர். 
பெண் சாவு
அஞ்சுகிராமம் அருகே உள்ள பார் யூர் மேட் குடியிருப்பு பகுதியை சேர்ந்த 52 வயது பெண். கொரோனாவால் பாதிக்கப்பட்ட இவர் நேற்று முன்தினம் நள்ளிரவு நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அனுமதிக்கப்பட்ட சில மணி நேரங்களில் அதாவது நேற்று அதிகாலை சுமார் 2.30 மணியளவில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். பின்னர் அவரது உடல் நாகர்கோவில் புளியடியில் உள்ள எரிவாயு தகன மையத்தில் நேற்று மாநகராட்சி ஊழியர்களால் தகனம் செய்யப்பட்டது.

Next Story