போலீசார் வழக்கு போடாமல் தாமதம்: தலையில் அரிவாள் வெட்டு காயத்துடன் வந்த விவசாயி கலெக்டரிடம் புகார்
போலீசார் வழக்கு போடாமல் தாமதம் ஏற்பட்டதால் தலையில் அரிவாள் வெட்டு காயத்துடன் வந்த விவசாயி அதுபற்றி கலெக்டரிடம் புகார் கொடுத்தார்.
திருச்சி,
லால்குடி அருகே உள்ள வாளாடி கிராமத்தை சேர்ந்தவர் பிரிதிவிராஜ் (வயது 53). விவசாயியான இவர் நேற்று திருச்சி கலெக்டர் அலுவலகத்திற்கு தலையில் அரிவாள் வெட்டு காயத்திற்கு பேண்டேஜ் கட்டுபோட்ட நிலையில் தனது குடும்பத்துடன் வந்தார். பின்னர் கலெக்டர் திவ்யதர்ஷினியிடம் புகார் மனு ஒன்றை கொடுத்தார்.அந்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:-
நான் விவசாயம் செய்து வருகிறேன். எனது தாயார் மருதம்மாள் இறந்த 30-வது தினம் அனுசரிக்கப்பட்டு குடும்பத்தினருடன் கடந்த 7-ந்தேதி வீட்டில் பூஜை செய்து கொண்டிருந்தோம்.
அப்போது எனது வீட்டிற்குள் புகுந்த, கல்கண்டார் கோட்டை, செம்பழனி கிராமத்தை சேர்ந்த 6 பேர் கும்பல் தகாத வார்த்தைகளால் பேசி என்னை மண்டையில் அரிவாளால் வெட்டினர். மேலும் எனது மைத்துனர் கருணாகரனையும் 6 பேரும் தாக்கினர். இதுகுறித்து சமயபுரம் போலீசாரிடம் புகார் கொடுத்தும், எங்களை தாக்கியவர்கள் மீது இதுவரை எவ்வித வழக்கும் பதிவு செய்யவில்லை. எனவே, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தாங்கள் ஆவன செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story