திருச்சி, தா.பேட்டை பகுதிகளில் இடி, மின்னலுடன் திடீர் மழை வெப்பம் தணிந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி


திருச்சி, தா.பேட்டை பகுதிகளில் இடி, மின்னலுடன் திடீர் மழை வெப்பம் தணிந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி
x
தினத்தந்தி 13 April 2021 1:53 AM IST (Updated: 13 April 2021 1:53 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி, தா.பேட்டையில் இடி, மின்னலுடன் திடீரென மழை பெய்ததால் வெப்பம் தணிந்தது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

திருச்சி, 
திருச்சி, தா.பேட்டையில் இடி, மின்னலுடன் திடீரென மழை பெய்ததால் வெப்பம் தணிந்தது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

திடீர் மழை

திருச்சி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரிக்கும் வகையில் அடித்தது. தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட அரசியல் கட்சி வேட்பாளர்களும் வெயிலின் கொடுமையால் திக்கு முக்காடினர். தேர்தல் கடந்த 6-ந் தேதி முடிந்து விட்டாலும் வெயிலின் வெப்பம் தணியாமல் தொடர்ந்தது.

அதிக பட்சமாக 107 டிகிரி வரை வெயில் அளவு திருச்சியில் பதிவானது. வெயிலின் தாக்கத்தால் பொதுமக்களும் பலர் வெளியில் தலைகாட்ட முடியாமல் முடங்கினர். 

இந்த நிலையில் நேற்று காலை சுமார் 7 மணியளவில் திருச்சி மாநகரில் திடீரென வானத்தில் கருமேகம் சூழ்ந்தது.
சிறிது நேரத்தில் எதிர்பாராத வகையில் மழை பெய்ய தொடங்கியது. இதனால், நீண்டநாட்களாக வெயிலின் தாக்கத்தில் அவதிப்பட்ட பொதுமக்கள், மழை பெய்ததால் மகிழ்ச்சி அடைந்தனர்.

வெப்பம் தணிந்தது

திருச்சி மாநகரில் சுமார் 30 நிமிட நேரம் மழை கொட்டி தீர்த்தது. திருச்சி ஜங்ஷன், டவுன், மத்திய பஸ் நிலையம், எடமலைப்பட்டி புதூர், கருமண்டபம், பொன்நகர், பாலக்கரை, ஏர்போர்ட் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. சாலையில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.

சில இடங்களில் மழை நீர் தேங்கி நின்றாலும் அவற்றை பூமி விரைவாக உள்ளிழுத்து கொண்டது. இதனால், மழை பெய்ததா? என்று சொல்லும் அளவுக்கு அதன் சுவடுகள் இன்றி காணப்பட்டது.

தா.பேட்டை

இதுபோல் தா.பேட்டை பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக வெயில் சுட்டெரித்து வந்தது. நேற்றும் பகலில் வெயில் அதிகமாக இருந்த நிலையில் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர். 

இந்த நிலையில் திடீரென கருமேகங்கள் சூழ்ந்தது. தா.பேட்டை மற்றும் சுற்றி உள்ள பகுதியில் சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக மிதமான மழை பெய்தது.

இதனால் தா.பேட்டை கடைவீதி மற்றும் தெருக்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இடி, மின்னலுடன் அரை மணி நேரம் பெய்த மழை காரணமாக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் குளிர்ந்த காற்று வீசியது.

மழைஅளவு

திருச்சி ஏர்போர்ட் பகுதியில் 7.50 மில்லி மீட்டரும், திருச்சி டவுன் பகுதியில் 4 மில்லி மீட்டரும் மட்டுமே மழை அளவு பதிவானது. மழை காரணமாக, பகலில் வெயிலின் தாக்கம் அதிக அளவில் இல்லை. 
வெப்பம் தணிந்து காணப்பட்டது. திருச்சி மாவட்டத்தில் நேற்று 91.6 டிகிரி அளவிலே வெயில் அளவு பதிவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story