ஈரோட்டில் பிரசித்தி பெற்ற பெரிய மாரியம்மன் வகையறா கோவில் கம்பம் பிடுங்கும் விழா- ஊர்வலம் இன்றி எளிமையாக நடந்தது
ஈரோட்டில் பிரசித்தி பெற்ற பெரிய மாரியம்மன் வகையறா கோவில்கள் கம்பம் பிடுங்கும் விழா நேற்று ஊர்வலம் இன்றி எளிமையாக நடந்தது.
ஈரோடு
ஈரோட்டில் பிரசித்தி பெற்ற பெரிய மாரியம்மன் வகையறா கோவில்கள் கம்பம் பிடுங்கும் விழா நேற்று ஊர்வலம் இன்றி எளிமையாக நடந்தது.
பெரிய மாரியம்மன் திருவிழா
ஈரோட்டில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றாக விளங்குவது பெரிய மாரியம்மன் கோவில். ஆண்டுதோறும் மாசி மாதம் பெரிய மாரியம்மன் கோவில் திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படும். பெரிய மாரியம்மன் கோவிலுடன் வகையறா கோவில்களாக உள்ள சின்ன மாரியம்மன் (நடுமாரியம்மன்), வாய்க்கால் மாரியம்மன் கோவில்களிலும் திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும். அதன்படி இந்த ஆண்டு திருவிழாவும் மாசி மாதம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டன. கொரோனா கட்டுப்பாடுகள், தேர்தல் ஆகிய காரணங்களால் இந்த ஆண்டு திருவிழா தள்ளி வைக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து கடந்த 6-ந் தேதி பூச்சாட்டுதலுடன் பெரிய மாரியம்மன், சின்ன மாரியம்மன், வாய்க்கால் மாரியம்மன் கோவில் திருவிழாக்கள் தொடங்கின. தொடர்ந்து கோவிலில் கம்பம் நடப்பட்டது. காரைவாய்க்கால் கோவிலில் குண்டம் திருவிழாவும், சின்னமாரியம்மன் கோவிலில் தேர்த்திருவிழாவும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. பொங்கல் விழாவும் நடந்து முடிந்தது. அடுத்து பிரசித்தி பெற்ற பெரிய மாரியம்மன் கம்பம் பிடுங்கும் விழாவுக்காக பக்தர்கள் ஆர்வத்துடன் காத்து இருந்தனர்.
கம்பம்
ஆனால் கடந்த 10-ந் தேதி முதல் தமிழ்நாட்டில் கொரோனா கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டதால் மத வழிபாட்டுத்தலங்களில் அதிக மக்கள் கூட்டம் சேர தடை விதிக்கப்பட்டது. இருப்பினும், கம்பம் பிடுங்கும் விழாவை தடையின்றி நடத்த பக்தர்கள் விரும்பினார்கள். அதன்பேரில் ஈரோடு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பி.தங்கதுரை, மாநகராட்சி ஆணையாளர் எம்.இளங்கோவன் ஆகியோரின் அறிவுரையின் பேரில் கம்பம் பிடுங்கும் விழாவை எளிமையாக மக்கள் கூட்டம் சேராமல், ஊர்வலம் இன்றி நடத்த முடிவு செய்யப்பட்டது.
அதன்படி நேற்று கம்பம் பிடுங்கும் விழா நடந்தது. நேற்று அதிகாலையில் கோவிலில் பெரிய மாரியம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் கோவிலில் நடப்பட்டு இருந்த கம்பம் பிடுங்கும் பூஜைகள் தொடங்கின. கம்பத்தில் வைக்கப்பட்டு இருந்த அக்னி சட்டி அகற்றப்பட்டது. கம்பத்தில் கட்டப்பட்டு இருந்த வேப்பிலைகள், பூ மாலைகள் அகற்றப்பட்டது. கோவில் பூசாரிகள், கோவில் நிர்வாகிகள் கம்பத்தை புனித நீர் விட்டு சுத்தம் செய்தனர். பின்னர் கம்பத்தில் புதிய வேப்பிலை கட்டப்பட்டது. பூ மாலைகளும் கட்டப்பட்டன. கம்பத்துக்கு சந்தனம், குங்கும பொட்டுகள் வைக்கப்பட்டது.
மினிடோரில்...
இதே நேரத்தில் சின்ன மாரியம்மன் கோவில், வாய்க்கால் மாரியம்மன் கோவில்களிலும் கம்பம் பிடுங்கும் நிகழ்வுகள் நடந்தன. கம்பம் பிடுங்கப்பட்டதும், மினி டோர் ஆட்டோக்களில் கம்பங்கள் எடுக்கப்பட்டு மணிக்கூண்டுக்கு கொண்டு வரப்பட்டன. முதலில் சின்னமாரியம்மன் கோவில் கம்பம் மணிக்கூண்டுக்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் காரைவாய்க்கால் மாரியம்மன் கம்பம் வந்து சேர்ந்தது. ஏற்கனவே இருந்த கம்பத்தை சுற்றி வந்து அங்கேயே நிலை நிறுத்தப்பட்டது.
அதன்பின்னர் பெரிய மாரியம்மன் கோவில் கம்பம் கொண்டு வரப்பட்டது. இந்த கம்பத்தை மற்ற 2 கம்பங்களையும் 3 முறை சுற்றி வந்து பூசாரிகள் நிலை நிறுத்தினார்கள். அப்போது நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் அங்கு கூடி இருந்தனர். அவர்கள் பாரம்பரியப்படி கம்பத்துக்கு பால், புனித நீர் ஊற்றியும், உப்பு-மிளகு போட்டும் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினார்கள். அங்கு 3 கம்பங்களுக்கும் சிறப்பு பூஜை செய்யப்பட்டது.
காவிரியில் விடப்பட்டன
அதைத்தொடர்ந்து வேப்பிலை தோரணங்கள், கரும்புகள் கட்டி அலங்காரம் செய்யப்பட்ட லாரியில் 3 கம்பங்களும் ஏற்றப்பட்டன. பக்தி கோஷங்கள் முழங்க கம்பம் ஊர்வலம் தொடங்கியது. மணிக்கூண்டில் இருந்து கடை வீதி, ஆர்.கே.வி. ரோடு, காவிரி ரோடு வழியாக கருங்கல்பாளையம் காவிரி ஆற்றுக்கு வாகனம் வந்தது. காவிரிக்கரை முனியப்பசாமி கோவில்வரை லாரி கொண்டு வரப்பட்டது. அங்கு பாதுகாப்பான இடத்தில் கம்பங்கள் இறக்கப்பட்டு, காவிரி ஆற்றில் இறக்கப்பட்டன. சூரிய உதய நேரத்தில் கம்பங்களுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. காவிரி தீர்த்தத்தை எடுத்து பக்தர்கள் கம்பத்தின் மீது தெளித்தனர். அப்போது அங்கு கூடி இருந்த 100-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பக்தி முழக்கங்கள் எழுப்ப, கம்பங்கள் ஆற்றுக்குள் விடப்பட்டன.
ஈரோடு டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜூ தலைமையில், டவுன் இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வன் மற்றும் போலீசார் அதிகாலை நேரத்திலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.
ஈரோடு மாநகரமே ஒட்டு மொத்தமாக கொண்டாடும் கம்பம் பிடுங்கும் விழா அதிகாலை நேரத்திலேயே மிகவும் எளிமையாக முடிக்கப்பட்டது.
Related Tags :
Next Story