கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் கலெக்டர் தீவிரம்- போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரையுடன் கடைகளில் சோதனை


கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் கலெக்டர் தீவிரம்- போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரையுடன் கடைகளில் சோதனை
x
தினத்தந்தி 13 April 2021 4:08 AM IST (Updated: 13 April 2021 4:08 AM IST)
t-max-icont-min-icon

ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தீவிர அக்கறை காட்டி வரும் கலெக்டர் சி.கதிரவன் நேற்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பி.தங்கதுரையுடன் கடைகளில் திடீர் சோதனை நடத்தினார்.

ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தீவிர அக்கறை காட்டி வரும் கலெக்டர் சி.கதிரவன் நேற்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பி.தங்கதுரையுடன் கடைகளில் திடீர் சோதனை நடத்தினார்.
திடீர் சோதனை
கொரோனா 2-வது அலை பாதிப்பில் இருந்து ஈரோடு மாவட்டத்தை பாதுகாக்கும் நடவடிக்கையில் மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் தலைமையிலான அதிகாரிகள் அதிரடி நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்கள். 
நேற்று கலெக்டர் சி.கதிரவன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பி.தங்கதுரை, மாநகராட்சி ஆணையாளர் எம்.இளங்கோவன் மற்றும் அதிகாரிகள் ஈரோடு மாநகர் பகுதியில் திடீர் சோதனை நடத்தினார்கள். ஈரோடு பெருந்துறை ரோட்டில் அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினார்கள்.
அறிவுரை
அங்குள்ள பெரு நிறுவன ஆடையகத்துக்குள் சென்று கொரோனா தடுப்பு வழிமுறைகள் அரசின் அறிவுறுத்தலின்படி பின்பற்றப்படுகிறதா? என்று பார்வையிட்டனர். இதுபோல் பல கடைகளிலும் சென்று பொதுமக்கள் இடைவெளியை பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும். முக கவசம் இல்லாமல் கடைகளுக்குள் யாரையும் அனுமதிக்க வேண்டாம் என்றும் அறிவுரை வழங்கினார்கள்.
அவர்கள் பெருந்துறை ரோட்டில் நின்றுகொண்டிருந்தபோது அந்த வழியாக வந்த ஒரு ஷேர் ஆட்டோவை போலீஸ் சூப்பிரண்டு நிறுத்தினார். அதில் பயணம் செய்தவர்கள், டிரைவர் ஆகியோர் முகக்கவசம் அணிந்து உள்ளனரா? என்று கலெக்டர் சோதனை செய்தார். மேலும், பயணிகளிடம் கொரோனா நேரத்தில் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து கலெக்டர் அறிவுரை வழங்கினார்.
கடைக்கு சீல்
பின்னர் கலெக்டர் தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் சூரம்பட்டி வலசு பகுதிக்கு சென்றனர். அங்கு கடை கடையாக சென்று கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு மற்றும் ஆணையாளர் சோதனை நடத்தினார்கள். அப்போது அங்குள்ள ஒரு எலக்ட்ரிக்கல் கடையில் கொரோனா தடுப்பு விதிமுறைகள் பின்பற்றப்படாமல் இருந்தது கண்டறியப்பட்டது. உடனடியாக அந்த கடையை பூட்டி சீல் வைக்க அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.
இதுபோல் பல்வேறு இடங்களில் கலெக்டர் சி.கதிரவன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பி.தங்கதுரை மற்றும் அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனை நடத்தினார்கள். கொரோனா பரவல் கட்டுக்குள் வரும்வரை இதுபோன்ற சோதனைகள் தொடரும் என்றும், சோதனையில் தவறுகள் கண்டறியப்பட்டால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கலெக்டர் எச்சரித்து உள்ளார்.

Next Story