ஈரோடு அருகே அரசு பஸ்சில் முதியவரை தாக்கிய கண்டக்டர் பணியிடை நீக்கம்
ஈரோடு அருகே அரசு பஸ்சில் முதியவரை தாக்கிய கண்டக்டர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
ஈரோடு
சித்தோடு பகுதியை சேர்ந்தவர் கணேசன் (வயது 73). காய்கறி வியாபாரி. இவர் நேற்று முன்தினம் அதிகாலை ஈரோடு மார்க்கெட்டுக்கு வருவதற்காக சித்தோடு பஸ் நிறுத்தத்தில் பஸ்சுக்காக காத்திருந்தார். அப்போது கோபியில் இருந்து ஈரோடு நோக்கி வந்த அரசு பஸ்சில் கணேசன் ஏறினார். அந்த பஸ்சில் கண்டக்டராக பணியாற்றிய குமார் (34) என்பவர் கணேசனிடம் டிக்கெட் கொடுப்பதற்கு கட்டணமாக சில்லரை கேட்டு உள்ளார். இதில் கணேசனுக்கும், கண்டக்டருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது கண்டக்டர் குமார் ஆத்திரம் அடைந்து, கணேசனை தாக்கினார். இந்த சம்பவத்தை சக பயணி ஒருவர் தனது செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பரவவிட்டார். இந்த வீடியோ வைரலாகியது.
இதையடுத்து அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். அப்போது முதியவரை தாக்கிய கண்டக்டர் குமார் கவுந்தப்பாடி பணிமனையை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து குமாரை பணியிடை நீக்கம் செய்து அதிகாரிகள் உத்தரவிட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக சித்தோடு போலீசாரும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story