ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பரவலாக கோடை மழை


ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பரவலாக கோடை மழை
x
தினத்தந்தி 13 April 2021 4:20 AM IST (Updated: 13 April 2021 4:20 AM IST)
t-max-icont-min-icon

ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பரவலாக கோடை மழை பெய்தது.

ஈரோடு
ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பரவலாக கோடை மழை பெய்தது.
கோடை மழை
ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஒரு மாதமாக கோடை வெயில் கொளுத்தி வருகிறது. பொதுமக்களை வெயில் வாட்டி எடுக்கிறது. சில நேரம் அனல் காற்று வீசுகிறது. இதன் காரணமாக ெபாதுமக்கள் வெளியே நடமாட முடியாமல் அவதிப்பட்டு வருகிறார்கள்.
இரவு நேரத்திலும் வீசும் வெப்ப காற்றால் வீட்டுக்குள்ளேயும் பொதுமக்கள் தூங்க முடியாமல் சிரமப்படுகின்றனர். இந்த நிலையில் வெப்பத்தை தணிக்கும் வகையில் நேற்று மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் பரவலாக கோடை மழை பெய்தது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
கொடுமுடி
கொடுமுடியில் நேற்று மாலை 3 மணி அளவில் மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை சுமார் 14 நிமிடங்கள் பெய்தது. இதனால் ரோட்டில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியது. தொடர்ந்து வானம் மேக மூட்டத்துடனே காணப்பட்டது.
இதேபோல் அந்தியூர், பருவாச்சி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் மாலை 5.30 மணி முதல் 6 மணி வரை சாரல் மழை பெய்தது. அம்மாபேட்டை, நெரிஞ்சிப்பேட்டை, சிங்கம்பேட்டை, கோனேரிப்பட்டி பிரிவு, பூதப்பாடி ஆகிய பகுதிகளில் மாலை 6.15 மணி முதல் மழை பெய்து கொண்டிருந்தது. மேலும் பவானியில் மதியம் 3.45 மணி முதல் 4.15 மணி வரையும், தாளவாடியில் மதியம் 3 மணி அளவில் சுமார் 5 நிமிடமும் மழை பெய்தது.

Next Story