திருப்பத்தூர் அருகே புதிய கற்கால மனிதர்கள் வாழ்ந்த குகை கண்டுபிடிப்பு


திருப்பத்தூர் அருகே புதிய கற்கால மனிதர்கள் வாழ்ந்த குகை கண்டுபிடிப்பு
x
தினத்தந்தி 13 April 2021 5:03 PM IST (Updated: 13 April 2021 5:03 PM IST)
t-max-icont-min-icon

திருப்பத்தூர் அருகே புதிய கற்கால மனிதர்கள் வாழ்ந்த குகை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

திருப்பத்தூர்

குகை கண்டுபிடிப்பு

திருப்பத்தூர் மாவட்டம் கெஜல்நாயக்கன்பட்டியில் இருந்து 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ள செல்லியம்மன் கொட்டாய் என்ற இடத்தில் குகைகள் இருப்பதாகக் கிடைத்த தகவலை அடுத்து திருப்பத்தூர் தூய நெஞ்சக்கல்லூரி தமிழ்த்துறைப் பேராசிரியர் ஆ.பிரபு, தொல்லியல் ஆய்வாளர் சேகர் மற்றும் ஆய்வு மாணவர்கள் தரணிதரன், கிருஷ்ணகுமார் ஆகியோர் அங்கு சென்று கள ஆய்வு மேற்கொண்டனர். 

அப்போது அங்குள்ள செல்லியம்மன் கோவில் வளாகத்தில் புதிய கற்கால கற் கோடாரிகள் வழிபாட்டில் இருப்பதும், அங்குள்ள தம்புரான் என்ற சிறிய குன்றில் புதிய கற்கால மனிதர்கள் வாழ்ந்த குகை ஒன்றைக் கண்டறிந்தனர்.
இதுகுறித்து பிரபு கூறியதாவது:-

5 ஓவியங்கள்

தம்பிரான் என்றால் தலைவன், இறைவன் என்று பொருள்படும். இக்குகை ஏறக்குறைய 10 பேர் வாழ ஏற்றதாக உள்ளது. குகையின் ஒருபுறம் மூன்று சுனைகள் காணப்படுகின்றன. அவற்றில் கோடைக் காலங்களிலும் வற்றாமல் தண்ணீர் தேங்கி இருக்கின்றது. குகையின் உட்புறத்தில் வெள்ளை நிற ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. மேற்புறத்தில் 5 ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்று இருப்பிடத்தைக் குறிப்பதாகவோ அல்லது அக்கால மக்கள் பயன்படுத்திய விளக்கினைக் குறிப்பதாகவோ இருக்கக்கூடும் எனக் கருதப்படுகின்றது.

ஒரு மனித உருவம் வலது கையில் வில்லும், இடது கையில் அம்பும் ஏந்திய நிலையில் வரையப்பட்டுள்ளது. இது வேட்டை நிகழ்வைக் குறிப்பதாக உள்ளது. மேலும் செல்லியம்மன் கோவிலுக்கு பின் புறம் உள்ள குகைக்குன்று என்ற சிறிய குன்றில் 6-க்கும் மேற்பட்ட இயற்கையான குகைகள் காணப்படுகின்றன. இக்குகைகளை அக்கால மக்கள் பயன்படுத்தியுள்ளனர் என்பதற்குச் சான்றாக குகை முகப்பில் வெள்ளை நிறத்தில் பறவை ஓவியம் ஒன்று வரையப்பட்டுள்ளது. 

பாதுகாத்திட வேண்டும்

தமிழகத்தின் வட பகுதிகளில் நிறைய பாறை ஓவியங்கள் கண்டறியப்பட்ட போதும், திருப்பத்தூர் தனி மாவட்டமாகப் பிரிக்கப்பட்ட பின்னர் இம்மாவட்டத்தில் கண்டறியப்படும் முதல் பாறை ஓவியம் இதுவாகும்.  செல்லியம்மன் கொட்டாயில் உள்ள குகைகளில் நெருப்பு மூட்டி கறி உணவுகள் சமைப்பது, மது அருந்துவது உள்ளிட்ட செயல்களால் இங்குள்ள பாறை ஓவியங்கள் அழிவின் விளிம்பில் உள்ளன. எனவே மாவட்ட நிர்வாகமும், தொல்லியல் துறையும் விரைந்து நடவடிக்கை எடுத்து இவற்றை பாதுகாத்திட முன்வர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story