போதிய இட வசதி இல்லாததால் திருவாரூர் அரசு அருங்காட்சியகத்தை மேம்படுத்த வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை
போதிய இட வசதி இல்லாததால் திருவாரூர் அரசு அருங்காட்சியகத்தை மேம்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவாரூர்,
அருங்காட்சியகம் என்பது கலாச்சாரம், கலை, அறிவியல் மற்றும் இயற்கை பொருட்களை பாதுகாக்கும் நோக்கில் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள அரும்பொருட்கள் ஆய்வுக்கும் நமது வாழ்வியல் சுழலை அறிந்து கொள்ளவும் உதவுகின்றன. தமிழகத்தில் 20 மாவட்ட தலைமை இடங்களில் அரசு அருங்காட்சியம் அமைக்கப்பட்டுள்ளது. இதை பார்வையிடும் மாணவர்கள் நமது முன்னோரின் கலை, அறிவியல் மற்றும் வாழ்வியல் சார்ந்த பழக்கங்களை தெரிந்து கொள்கிறார்கள்.
நாணயங்கள், வாத்திய கருவிகள்
திருவாரூர் அருங்காட்சியம் கடந்த 1998-ம் ஆண்டு திறக்கப்பட்டது. அன்றைய நிலையில் திருவாரூர் தியாகராஜர் கோவில் மேற்கு கோபுர வாசலில் உள்ள மண்டபத்தில் இடம் அளிக்கப்பட்டு இயங்கி வருகிறது. இந்த மண்டபத்தில் பாதி இடம் கோவில் அலுவலக பயன்பாட்டில் உள்ளது. போதிய இடவசதி இல்லாத நிலையில் கடந்த 24 ஆண்டுகளாக அருங்காட்சியகம் இயங்கி வருகிறது. இங்கு பழங்கால மக்கள் பயன்படுத்திய பொருட்கள், நாணயங்கள், வாத்திய கருவிகள் வைக்கப்பட்டுள்ளது.
முதுமக்கள் தாழி
மேலும் திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மண்ணுக்குள் புதைந்திருந்து மீட்கப்பட்ட புராதான பொருட்கள், சாமி சிலைகள் காட்சிப்படுத்தப்பட்டு பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. இதில் வைக்கப்பட்டுள்ள பஞ்சமுக வாத்தியம் சோழர் காலத்தில் பல்வேறு கோவில்களில் இசைக்கப்பட்ட கருவியாகும். தற்போதும் திருவாரூர் தியாகராஜர் கோவிலில் பஞ்சமுக வாத்தியம் வாசிக்கப்பட்டு வருவது சிறப்புக்குரியது.
கி.மு. 2 நூற்றாண்டில் தமிழர்கள் இறந்தவர்களை தாழியில் வைத்து, அவர்கள் பயன்படுத்திய பொருட்களையும் அதற்குள் வைத்து பூமியில் புதைக்கும் வழக்கம் இருந்தது. இந்த தாழி முதுமக்கள் தாழி என அழைக்கப்படுகிறது. இந்த தாழி வலங்கைமான் ஆவூர் கிராமத்தில் கால்நடை மருத்துவமனை கட்டிடம் கட்டுவதற்காக அஸ்வாதிரம் தோண்டும்போது கிடைத்துள்ளது. இது முதுமக்கள் தாழி என மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
புத்தர் சிலை
கடந்த 2012 ஆண்டு திருவாரூர் அருகே கண்டிரமாணிக்கம் என்ற கிராமத்தில் பள்ளம் தொண்டியபோது புத்தர் கற்சிலை கிடைத்துள்ளது. இந்த கற்சிலை அருங்காட்சியத்தின் வாசலில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் பழங்கால மக்கள் பயன்படுத்திய கோடாரி, வெட்டும் கத்தி, அரிவாள், கற்கருவிகள் மற்றும் உயிரினங்கள், தோல் பொருட்கள் இங்கு வைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பழமையான சிலைகள், படிமங்கள் ஆகியவை தனித்தனி பெட்டியில் வைக்கப்பட்டுள்ளது.
மேம்படுத்த கோரிக்கை
இந்த அருங்காட்சியத்தில் மேலும் பல்வேறு அரும்பொருட்கள் காட்சிப்படுத்த போதிய இடவசதி இல்லை. பாதுகாப்பு தன்மையை கருத்தில் கொண்டு திருவாரூர் மாவட்டத்தில் புதைந்து கிடந்து எடுக்கப்பட்ட அரிதான சாமி சிலைகள், உலோகம், ஐம்பொன் போன்ற சிலைகள் உடனடியாக சென்னையில் உள்ள தலைமை அருங்காட்சியத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது.
அருங்காட்சியம் என்பது அந்தந்த மாவட்டத்தின் பழம் பெருமைகள், பழமை வாய்ந்த கோவில்களின் வரலாறு, கண்டெக்கப்படும் சிலைகள் போன்ற பொருட்களை காட்சிப்படுத்தி மக்கள் அறிந்து கொள்ளவும், ஆய்வு மாணவர்கள் பயன்பெறும் வகையிலும் அமையும். ஆனால் இதற்கான போதிய இடவசதி இல்லாத வகையில் திருவாரூர் அருங்காட்சியம் அமைந்துள்ளது.
கோவில் வளாகத்தில் திருவாரூர் அருங்காட்சியகம் உள்ளதால் வெளியில் அனைவரும் அரிய வாய்ப்பு இல்லாமல் உள்ளது.
எனவே திருவாரூர் அரசு அருங்காட்சியகத்தை போதிய இட வசதி உள்ள கட்டிடத்துக்கு மாற்றி மேம்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story