யுகாதி பண்டிகையை முன்னிட்டு பழனி பெரியநாயகி அம்மன் கோவிலில் பஞ்சாங்கம் வாசிப்பு
பழனி பெரியநாயகி அம்மன் கோவிலில் யுகாதி பண்டிகையை முன்னிட்டு பஞ்சாங்கம் வாசிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
பழனி:
பழனி முருகன் கோவிலின் உபகோவிலான பெரியநாயகி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் யுகாதி பண்டிகையை முன்னிட்டு பஞ்சாங்கம் வாசிக்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. அதன்படி பழனி பெரியநாயகி அம்மன் கோவிலில் முத்துக்குமாரசாமி சன்னதியில் பஞ்சாங்கம் வைத்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. முன்னதாக பெரியநாயகி அம்மன், முருகப்பெருமான், சிவன், நடராஜர், சிவகாமி அம்மன் ஆகியோருக்கு சாயரட்சை பூஜையும், அதைத் தொடர்ந்து அபிஷேக ஆராதனையும், சிறப்பு அலங்காரமும், தீபாராதனையும் நடைபெற்றது. முத்துக்குமாரசாமி சன்னதியில் பஞ்சாங்கம் படிப்பதற்காக மஞ்சள் பிள்ளையார் பிடித்து வைத்து பஞ்சாங்கம் புத்தகங்களுக்கு சிறப்பு ஆராதனை மற்றும் தீபாராதனை காட்டப்பட்டது.
பஞ்சாங்கம் வாசிப்பு
இதைத்தொடர்ந்து கோவில் குருக்கள் பிரபு பஞ்சாங்கம் வாசிக்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். பஞ்சாங்கம் படிப்பதை காதால் கேட்பதால் செல்வங்கள் பெருகும், ஆயுள் பெருகும், தீயவை அழிக்கப்படும், காரிய வெற்றி ஏற்படும், ஓராண்டு முழுவதும் கோவில்களுக்கு சென்று வந்த பலனை தரும் என்று அவர் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து பிலவ ஆண்டு பஞ்சாங்கம் வாசிக்கப்பட்டது. பஞ்சாங்கத்தில் மழை வளம், ஆண்டு பலன், கிரகங்களின் நிலை மற்றும் ஆண்டு முழுவதும் ஒவ்வொரு ராசிக்கும் ஏற்படும் பலன்கள் குறித்து வாசிக்கப்பட்டது. அதன் பின்னர் முத்துக்குமாரசாமி, வள்ளி-தெய்வானைக்கு தீபாராதனை காட்டப்பட்டது. இதைத்தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது
Related Tags :
Next Story