கொரோனா பரவலை தடுக்க தீவிர நடவடிக்கை வாகன ஓட்டிகளுக்கு முககவசம்-கடைகளுக்கு ‘சீல்’ அதிரடியில் இறங்கிய அதிகாரிகள்


கொரோனா பரவலை தடுக்க தீவிர நடவடிக்கை வாகன ஓட்டிகளுக்கு முககவசம்-கடைகளுக்கு ‘சீல்’  அதிரடியில் இறங்கிய அதிகாரிகள்
x
தினத்தந்தி 13 April 2021 8:59 PM IST (Updated: 13 April 2021 8:59 PM IST)
t-max-icont-min-icon

கொரோனா பரவலை தடுப்பதற்கு வாகன ஓட்டிகளுக்கு முககவசம் வழங்கியும், கடைகளுக்கு ‘சீல்’ வைத்தும் அதிகாரிகள் அதிரடி நடவடிக்கையில் இறங்கினர்.


திண்டுக்கல்:

திண்டுக்கல் மாவட்டத்தில் தினமும் 50-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு வருகிறது. இதனால் மாவட்டம் முழுவதும் கொரோனா தடுப்பு பணிகள் முழுவீச்சில் முடுக்கி விடப்பட்டுள்ளன. 
ஆனால், திண்டுக்கல்லில் முககவசம் அணியாமல் பலர் வாகனங்களில் சுற்றி திரிகின்றனர். அதுபோன்ற நபர்களுக்கு போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தும்படி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரவளிபிரியா உத்தரவிட்டார். இதையடுத்து திண்டுக்கல் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் தலைமையிலான சப்-இன்ஸ்பெக்டர் ரஞ்சித் மற்றும் போலீசார் நேற்று சப்-கலெக்டர் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது முககவசம் அணியாமல் வந்த வாகன ஓட்டிகளை போலீசார் தடுத்து நிறுத்தினர். பின்னர் கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்கு முககவசம் அணியும்படி போலீசார் அறிவுறுத்தினர். மேலும் முககவசம் அணியாமல் வந்த 500 பேருக்கு போலீசார் முககவசம் வழங்கினர். அதோடு இனிமேல் முககவசம் அணியாமல் வந்தால் அபராதம் விதிக்கப்படும் என்றும் போலீசார் எச்சரித்து அனுப்பினர்.

3 கடைகளுக்கு ‘சீல்’ வைப்பு
இதற்கிடையே திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் நகர்நல அலுவலர் லட்சியவர்ணா தலைமையிலான சுகாதார ஆய்வாளர்கள் நேற்று கடைகளில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது கடைகளில் சமூக இடைவெளி கடைபிடிக்கப்படுகிறதா, ஊழியர்கள் முககவசம் அணிகிறார்களா? என்று ஆய்வு செய்தனர். அதில் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் வாடிக்கையாளர்கள் நெருக்கமாக நின்று பொருட்கள் வாங்கிய 3 கடைகளுக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர். அதேபோல் முககவசம் அணியாமல் சுற்றித்திரிந்த 78 பேருக்கு தலா ரூ.200 அபராதம் விதித்தனர்.


Next Story